Wednesday 2 May 2012

கவிதை வரம்புக்கப்பால்



                      கம்பனில்  மனித இயல்பு      




ஒரு மனிதனைப் போல இன்னொருவர் இருப்பதில்லை. பல கோடி மக்கள் இருப்பினும், கை ரேகைகள் ஒத்திருப்பதில்லை என்பதை அறிவோம்.  சமீபத்தியக் கண்டுபிடிப்பொன்று புல்லாக இருப்பினும், ஒவ்வொன்றும் தனி அடையாளம் கொண்டிருக்கிறது என்று கூறுகிறது. இப்படி உருவில் தனித்தன்மை இருந்தபோதிலும், ஒவ்வொரு இனமும் தனக்கென சில குணங்களைக் கொண்டிருக்கின்றன. அதில் வேறுபாடு அதிகமில்லை. அதனால்தான் நாய் நன்றியுள்ளது, நரி தந்திரமானது, காக்கை ஒத்து வாழும் குணமுடையது என்றெல்லாம் கூறுகிறோம். மனிதர்களையும்  இவ்வாறு கூறு போட்டுப் பிரிக்க முடியும். அதனால்தான் ஒத்த குணங்களும், ஒத்த விருப்பங்களும், ஒத்த இலட்சியங்களும் உள்ளவர்கள் ஒன்றுசேர்ந்து எதையும் சாதிக்க முடிகிறது. ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடிகிறது. ஆயிரம் பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும், அவற்றினூடே பிரியாதிருக்க முடிகிறது.

வாழ்க்கை அனுபவங்கள், வளரும் சூழல், பெற்ற அறிவு, சிந்தனை இவை மாறுபடுவதால், பார்க்கும் கண்ணோட்டம், எடுக்கும் முடிவுகள் இவை மனிதனுக்கு மனிதன் வேறுபடலாம். ஆனால் அவனது உணர்வும், மனமும் பெரும்பாலும் ஒன்றுபட்ட நிலையிலேயே செயல்படுகின்றன. இன்பத்தை நாடுவதும், துன்பத்தைத் தவிர்க்க எண்ணுவதும், தான் விரும்பியது கிடைக்காதபோது ஏமாற்றம் கொள்வதும், அதை அடைந்தே தீருவது என்று அதன்மீது வேட்கைக் கொள்வதும், இடையே கிடைக்காமல் போய்விடுமோ என்ற தாபத்தில் கோபம் கொள்வதும்; எல்லாருக்கும் பொதுவானது. அநேகமாக, இந்த வட்டத்திற்குள்தான் அனைவரும் அடக்கம். இதையே “மனித இயல்பு” என்று சொல்லுகிறோம். இந்தச் சராசரி தரத்திலிருந்து இவற்றை அடக்கி, மேம்பட்டு உயர்பவர்களைப் போற்றுகிறோம், பின்பற்றுகிறோம் அல்லது பின்பற்ற விழைகிறோம். இதிலிருந்து தாழ்ந்து போகிறவர்களை, நம் தரத்திற்கேற்ப மன்னிக்கிறோம், திருத்துகிறோம் அல்லது விட்டுவிலகுகிறோம்.

இந்த மனித இயல்பு கூடக்குறைய இருக்க முடியுமே தவிர, மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் நிரவியே இருக்கிறது. ஒரு அனுபவம் நேரிடும்போது உடனடியாக வெளிப்படுவது இந்த இயல்;புதான். சிலர் அதை அறிவால் அடக்கி, சீர் தூக்கிப் பார்த்து, மாறாக, தன் இச்சைகளை அடக்கியேனும் நேர்மையாக நடந்துகொள்கிறார்கள். ஒரு சிலருக்கு அதை மீள முடிவதில்லை. இந்த மனித இயல்புகளை மீறுபவருக்குக் கூட அந்தரங்கத்தில் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கலாம். வீணாக எதையோ இழக்கிறோமோ என்ற குறுகுறுப்பும், கழிவிரக்கமும் ஊடாடிக் கொண்டிருக்கலாம். இதுவும் மனித இயல்புதான்!

இந்த உணர்வுகளை எடுத்த எடுப்பிலேயே வென்று விடுபவர் யாருமில்லை. இதனால்தான் ஞானியரும், மேதைகளும் புலனடக்கம் பற்றியும், அதைக் கடைப்பிடிக்க முடியா மனித பலவீனம் பற்றியும் அதிகம் பேசுகிறார்கள்.

    “தனியனேன் பெரும் பிறவிப்  பௌவத்து எவ்;வம்
    தடம் திரையால் எற்றுண்டு பற்றுஒன்று இன்றிக்
   கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
    கலக்குண்டு காம வான்சுறவின் வாய்ப்பட்டு
   இனிஎன்னே உய்யும்ஆறு என்றுஎன்று எண்ணி
    அஞ்சு எழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேன்”


என்கிறார் மாணிக்கவாசகர். (துணை ஏதும் கிடைக்கப் பெறாத நான், பிறவிப் பெருங்கடலில் தத்தளிக்கிறேன். துன்பம் என்னும் பேரலை வந்து மோதுகிறது. மாதர் மயக்கம் என்னும் காற்று வீசி என் மனதைக் கலக்குகிறது. ஆசை என்னும் சுறாமீன் என்னை விழுங்க வருகிறது. இனி உய்யும் வகை யாது என்று பலவாறு எண்ணுகிறேன்)

     “சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
       செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்
     வந்து நின்னடிக் காட்செய என்றால்
       வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே
     எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
      இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலே” என்கிறார் வள்ளலார்.

இந்தக் கண்ணோட்டத்தில் இராம காவியத்தினைக் கவனிக்கும்போது, அதில் பங்கு கொள்கிற ஆண் பாத்திரங்கள் பெரும்பாலும் இந்தச் சாதாரண மனித இயல்புகளை வென்றவர்களாகவே உள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு சிறிதும் தயங்காது, தங்கள் முடிவுகளைப் பற்றிய உறுத்தலோ, வருத்தமோ இன்றிச் செயல்படுகின்றனர். தங்களைப் பற்றி மட்டுமல்ல, தங்களைச் சுற்றியுள்ளோரின் உணர்வுகளைப் பற்றியும் கூடச் சிந்தித்தார்களா என்ற ஐயம் எழுகிறது. அந்த அளவு உடனடியான பெரும் முடிவுகளைச் சடுதியில் எந்தப் போராட்டமும், கலக்கமும் இன்றி எடுக்கின்றனர். முடிவு எடுத்தபின்னரும் அதுபற்றி நினைத்துப் பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி எந்தச் சலனமுமின்றி ஓர் இலட்சியவாதியாக, ஒரு குறிக்கோளை நோக்கியே பயணிக்க வேண்டுமென்றால் சராசரி மனித உணர்வுகளை வென்றவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அந்த அளவு ஏதோ ஒரு வகையில் “தெய்வாம்சம்” பொருந்தியவர்களாகவே அவர்களைக் காண்கிறோம்.

பால காண்டத்திலேயே, அயோத்தியின் சிறப்பைப் பற்றிக் கூறவந்த கம்பன் “பொங்கு மா தவமும், ஞானமும், புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன “செங்கண் மால்” பிறந்து, ஆண்டு, அளப்ப அருங்காலம் திருவின் வீற்றிருந்தனன்” (நகரப்படலம்-98) என்று ராமனுக்குக் கட்டியம் கூறிவிட்டான். எனவே ராமனை ஒரு தெய்வப்பிறவியாகவே நோக்குதல் நலம். இதை உறுதிப்படுத்துவது போலவே அகலிகை மீட்பு நடைபெறுகிறது:

     “கண்ட கல்மிசைக் காகுந்தன் கழல் துகள் கதுவ,
     உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
     கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப
     பண்டை வண்ணமாய் நின்றனள் .....”  (பால.அகலி.465)
     

அறியாமை இருள் நீங்கி, ஞானமுற்றவன் பரமன் திருவடிகளை அடைவதைப் போல, அகலிகை முன்னைய வடிவத்தோடு எழுந்தாள் என்று ஐயமற தெரிந்துகொள்கிறோம். இதனால்தான் பரசுராமன் தன் வீரதீர பராக்கிரமச் செயல்கள் பற்றிய வர்ணனைகள் அனைத்தையும் சொல்லக் கேட்ட ராமன், “முறுவல் எய்தி, நன்று ஒளிர் முகத்தன் ஆகி”,  “நாரணன் வலியின் ஆண்ட வென்றிவில் தருக” எனத் தனக்குரிமையான வில்லைத் தானே வாங்கும் நோக்கில் கூறுகிறான். அடுத்து அரியணை ஏறுமுன் கைகேயி ‘பரதன் நாடாளட்டும், நீ காடு சென்று பதினான்கு ஆண்டுகள் கழித்து வா’ எனக் கூறியபோது, குழப்பமோ,  வியப்போ, ஏன் என்ற கேள்விக்குறியோ இன்றி “அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்ற” முகம் கொள்ள ஒரு சாதாரண மனிதனால் முடியுமா என்பது சந்தேகமே!

விராதன் சீதையைக் கொண்டு செல்ல முயன்றபோதும், “சிறிது மென் முறுவல் வெண் நிலவு உக” (ஆரணி.விரா.22) அவனால் இருக்க முடிந்தது. அகலிகை போன்று விராதனும், ராமன் காலடி பட்டதும் “பட்ட தன்மையும் உணர்ந்து படர் சாபம் இட முன் சுட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான் விட்டு விண்ணிடை விளங்கினன்”.(ஆ.வி.45).

போர்க்களத்தில் ராவணனுடைய வில்லுக்கெதிராய் அம்பு தொடுத்தபோது கூட ராமன் “முறுவல் எய்திய முகத்தினன்” ஆகவே விளங்குகிறான். சிகரம் வைத்தாற்போல ராவணன் வாயிலாகவே கம்பன்,

   “எறித்த போர் அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம் எஞ்சப்
  பறித்த போது, என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப்
  பொறித்த போது, அன்னான் அந்தக் கூனி கூன் போக உண்டை
 தெறித்த போது ஒத்தது அன்றி, சினம் உண்மை தெரிந்தது இல்லை” (யுத்த.கும்ப.17) என்று கூறுகிறான்.

இப்படி எல்லா நிலைகளிலும், அதாவது மனித இயல்புள்ள ஒருவன் கோபமோ அல்லது வருத்தமோ கொள்ளும் இடங்கள் அத்தனையிலும் ராமன் நிலை குலையாது புன்சிரிப்புத் தவழ நிற்கக் காண்கிறோம். இந்த “தெய்வாம்சமே” ராமன் மீது இன்றுவரை சாட்டப்படும் குற்றங்களான ‘வாலி வதை’, ‘சீதையின் தீக்குளிப்பு” இரண்டுக்கும் பதில் கூற வல்லது. தீமை தோற்க வேண்டும், அதற்கு இடமளித்திருக்கும் மாயைக் கலைய வேண்டும், ஆன்மா மீட்படைய வேண்டும் என்றால் இறைவன் வலிய ஆட்கொள்ள வேண்டும்.அவன் கண் முன் இன்ப துன்பமும், ஆக்கல் அழித்தலும், “பொய்ம்மையும், வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்ற வள்ளுவத்திற்கிணங்க நன்று-தவறுகளும் ஒன்றே! “ஆத்மா பிறப்பற்றது, என்றுமுள்ளது. சரீரம் கொல்லப்படும்போதும் இது கொல்லப்படுவதில்லை. இந்நிலையில் யார் யாரைக் கொல்ல முடியும்?” (பகவத்கீதை2-20,21), “எல்லாப் பிராணிகளின் முதலும், நடுவும், முடிவும் நானே!” (பகவத்கீதை10-20) இந்த நோக்கில் வாலியின் முடிவை “வதமாக” எப்படிக் கொள்ள முடியும்? இந்த உண்மையை உணர்ந்தே வாலியும் “மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ! பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ!” என்று பரவசப்படுகிறான்.(கிட்.வாலி.129)இதே கோணத்தில் செய்யப்பட்டதுதான் தாடகை வதமும். “ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்” என விசுவாமித்திரர் சொல்லும்போது, “அறன் அல்லவும் எய்தினால்” (பால.தாட.44) கூட இதைச் செய்து முடிப்பேன் என ராமன் கூறவில்லையா? தாடகை இராவணனுக்குப் பாட்டி என்ற உறவைக் கம்பன் “பருந்து உணப் பாட்டி யாக்கை படுத்த நாள்” (யுத்த. அங்கதன்32) என்று கூறுகிறான். எனவே விசுவாமித்திரனுடைய தவத்திற்கு பாதுகாப்பும், ராவணன் ராமனால் கொல்லப்படுவான் என்ற நம்பிக்கை தேவர்கள் பெறவும் செய்தது இந்த வதையும்!

இனி மிக மிக நுட்பமான “சீதையின் தீக்குளிப்பில்” ராமன் நிலையினைப் பார்ப்போம். அலங்காரம் செய்ய மறுத்த சீதையை, அது ராமனின் விருப்பம் எனக்கூறிச் சம்மதிக்க வைக்கிறான் வீடணன். இதற்கிடையே ராமனும், அரக்கர்கள் சீதையைக் காணும்பொருட்டு கூடுவதைத்; தவிர்க்க எண்ணி விலக்குவோரைக் கடிய விரும்பி, வீடணனிடம் கோபமாகப் பேசுகிறான். பின்னர் சீதையைக் காண்கிறான்: அதுவும் எப்படிப்பட்ட சீதையை!?

“ கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
 பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை
 தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
 அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான்” (யுத்த.மீட்சி.60)

‘தன்னைப் பிரிந்தாலும், உயிர்களுக்கு நல்லருள் புரிகின்ற தர்மம் போன்றவளை அன்பின் தலைவன் ஆழ்ந்து நோக்கினான்’. ஒரு கணவன், மனைவி மீது அன்பும், ஆசையும், நம்பிக்கையும் கொண்ட ஒருவன் போலப் பார்த்தான்! இங்கு அவனது ‘அவதார’ நோக்கு ஆரம்பமாகிறது. தெய்வாம்சம் பொருந்தியவர்களும் உலக வாழ்க்கையின் போது உலகத்தோடு ஒட்டி வாழ்ந்தாக வேண்டியுள்ளது. தன்னை இறைவனின் குமாரன் எனப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஏசு, எத்தனையோப் புதுமைகளைச் செய்து மக்களை பிரமிக்கச் செய்தவர், தான் வாழ்ந்த சூழலுக்கேற்ப ‘மனுமகனுக்குத் தலை சாய்க்க இடமில்லை’ என்று கூறவும், தன்னையேச் சிலுவைச் சாவுக்குக் கையளிக்கவும் வேண்டியதாயிற்று.

திரு ஜெயகாந்தன் மிக ஆழகாகக் கூறுகிறார்: “இறுதியில் என்ன மிஞ்சுகிறது என்று காட்ட எல்லாமே வேண்டும். தர்மம் வெல்லும் என்று காட்ட அதர்மம் வேண்டும். ஒழுக்கத்தின் சிறப்பைப் பேச ஒழுக்கக் கேட்டின் விளைவையும் சொல்ல வேண்டும். ராமன் சரயு நதியில் மூழ்கி மாள வேண்டுமென்று யார் ஆசைப்படுவார்? சீதையைப் பூமி பிளந்து விழுங்கியதில் யாருக்குச் சம்மதம்? டெஸ்டிமோனாவைச் சந்தேகித்து ஒதெல்லோ அவளைக் கொன்றது யாருக்கு உடன்பாடு? அம்பிகாபதிக்குக் கொலைத் தண்டனைக் கிடைத்ததில் யாருக்கு மகிழ்ச்சி? பாலை மணலில் கயஸ் பைத்தியமாகத் திரிவதில் யாருக்குத் திருப்தி? ‘வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் உங்களைச் சுற்றி நிகழும் வாழ்வின் சோகத்தை மறந்து திரிகிறீர்களே, இதையும் பாருங்கள்’ என்று காட்டவே அவர்கள் அவற்றைப் படைத்தார்கள்!” அது போல சீதையைக் காணக் கூடியிருப்போர்  மனதில் தோன்றக் கூடியக் கேள்விகளுக்குப் பதிலளித்து, தன் அன்புக்குரியவள் மாசற்றவள் என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறான் ராமன் தற்போது. எனினும், அந்தக் கொடுமையைப் பொறாத கம்பன் “பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா”(படம் எடுத்துச் சீறுகின்ற பாம்பென) என்கிறான். குற்றமற்றவளைக் கடுஞ் சொற்களால் தாக்கி, ‘உன் நிலையை சாதித்துக் காட்டு’ என்று கூறிய  ராமன், அதற்குப் பிறகு  பேசவில்லை, பேச இயலவில்லை போலும்! ஆனால் கம்பன் ஒரு அருமையான சொல்லால் ராமன் சீதையை மனமார ஏசவில்லை எனஅவன் செய்கைக்கு முலாம் பூசுகிறான். “ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும் வாடிய இல்லையால், உணர்த்துமாறு உண்டோ?” (யுத்த.மீட்சி.87) (ராமனின் ஊடல் கோபத்தால், தனக்கு உண்டாகிய வியர்வைத் துளிகள் உலரா நிலையில் வேறென்ன சொல்லி உணர்த்துவது?) என்று அக்னித் தேவன் வழி பேசுகிறான், ராமன் கொண்டது ஊடலேயன்றி வேறெதுவுமில்லை என்பதுபோல். இறுதியாக ராமன் ஊருக்கே, உலகத்திற்கே தெரிவிப்பது போன்று,
               
   “அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு ஆதலால்
    இழிப்பு இல சொல்லி, நீ இவளை “யாதும் ஓர்
    பழிப்பு இலள்” என்றனை, பழியும் இன்று இனிக்
  கழிப்பிலள்”  (யுத்த.மீட்சி97) என்று சீதையின் கற்பினை நிலைநாட்டுகிறான்!

வானுலகில் தேவர்கள் தங்கள் தவத்திற்கு ஊறு செய்யும் அரக்கர்களை அழித்து, தங்களை காக்கும்படி வேண்ட, திருமால் “வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய், கானினும், வரையினும், கடி தடத்தினும் சேனையோடு அவதரித்திடுமின் சென்று” (பால.திரு அவதா.20) என்று கூறியதோடு,

   “மசரதம் அனையவர் வரமும், வாழ்வும் ஓர்
    நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்
    கசரத துரக மாக் கடல்கொள் காவலன்
    தசரதன் மதலையாய் வருதும் தாரணி
    வளையொடு திகிரியும், வடவை தீதர
    விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்
    இளையவர்கள என அடிபரவ ஏகி, நாம்
 வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன்” ((பால.திருஅவதா.21-22)

ஐயத்திற்கிடமின்றி விண்ணுலக தேவர்கள் குரங்கினங்களாக, அரக்கர்களின் வர பலத்தையும், வாழ்வையும் அழிக்கத் தானே தசரதன்மகனாகவும், தன் படைக்கலங்களான சங்கும், சக்கரமும், படுக்கையான அனந்தனும் தனக்கு இளையோராகவும் பிறப்போம் என்றுவாக்களித்ததாகக் கூறுகிறான் கம்பன். (இதில் சங்கு-சத்துருக்கன், சக்கரம்-பரதன், அனந்தன்-இலக்குவன் என்பர். வான்மீகம் விஷ்ணுவின் பாதி அம்சம் ராமனாகவும், நாலில் ஒரு அம்சம் பரதனாகவும், மீதி அம்சம் இலக்குவன்-சத்துருக்கன் ஆகவும் பிறப்பெடுத்தது என்கிறது) மனித உருவில் இருந்தபோதும் இந்த “தெய்வாம்சம்”தான் அவர்களை ஒரு ‘ளரிநச அயn’ அளவில் மிகைப்படுத்தப்பட்ட சக்தியோடு உலவ வைக்கிறது. இதுமட்டுமல்ல, தெளிவாகவே நான்முகன், “முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன்” - முன்பே கரடிகட்கு அரசனான ‘சாம்பவந்தன்’ என்பவனாக நான் வந்து பிறந்துள்ளேன் என்று கூறியதாகச் சொல்கிறான் கம்பன் (பால.திருஅவ.25) அடுத்து வரும் பாடல்களில் (26-27) இந்திரன் வாலி, அவன் மகன் அங்கதனாகவும், சூரியன் வாலியின் தம்பி சுக்ரீவனாகவும், அக்கினி நீலன் என்ற வானரத் தலைவனாகவும் பிறப்பதாகவும், காற்றுத் தேவன் ‘மற்று எனது கூறு மாருதி’ என, “புராரி மற்றுயானும் காற்றின் சேய்” (திரிபுரத்தை எரித்த சிவபிரான் யானும் வாயுகுமாரனான அனுமனாகப் பிறக்கிறேன்) என்று வாக்களிப்பதாகவும் காண்கிறோம். இந்தப் பிண்ணனி அசுரரை ஒழிக்க, தேவலோகமே திரண்டு வந்ததை சந்தேகத்திற்கிடமின்றி தெரிவிக்கிறது.


இந்த அடிப்படையில் இலக்குவன் ராமனின் நிழலாக, தனக்கெனத் தனி அடையாளம் ஏதுமில்லாத “தம்பி” (‘தம்பி தன்னொடு’ -பால.கையடை.18), (‘அன்ன தம்பியும்’ 21) என்ற சொல் ஒன்றினாலேயே சுட்டிக் காட்டப் படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! மேலும் கம்பன் “நான்முகன் தனக்களித்த வித்தைகளை பார்வைவழி இராம இலக்குவருக்கு அளித்தான்” என்று விசுவாமித்திரனைப் பற்றிக் கூறுகிறான். எனவே இலக்குவனின் வீரத்தைப் பற்றிய விளக்கம் தேவைப்படவே இல்லை! தான் மணந்தவளைச் சடுதியில் பிரியத் துணிந்தவன், பிறகு எந்த சூழ்நிலையிலும் அவளை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை, அதற்காகக் கிஞ்சித்தும் வருந்தவில்லை என்பதற்கு இதைவிட வேறு பொருத்தமான எந்தக் காரணத்தைச் சொல்ல முடியும்? சீதைக்கு இணையாக ராமனைப் பிரிந்து தன்னால் வாழ இயலாது என்பதையும் இலக்குவன் “நானும் சீதையும் ஆர் உளர் எனின் உளம்?” (அயோ.நகர்.152) என்று கூறுவதன் மூலம் அழுத்தமாகத் தெரிவிக்கிறான்.

தாய் செய்த துரோகத்தால் எதிர்மறையாகச் செயல்பட்டான் பரதன் என்று கொள்ள இடமிருந்தாலும், ராமனைப் போல வனத்திலேயே தங்க முடிவெடுத்ததற்கு இது ஒரு பலமான காரணமே! “அடித்தலம் இரண்டையும்,...முடித்தலம் இவை” (திருவடிசூ.பட.136) என சொல்லுமளவுக்கு அவனை வழிநடத்தியது இந்த பழைய பந்தமாக இருக்கலாம்! இவனும் மனைவியை மறந்து துறவு பூண்டதற்கு ராமனை விட்டு விலகி வாழ இயலாத இவர்களது பூர்வ உறவே அடித்தளமாக இருக்க வேண்டும்!

இவ்வட்டத்திற்கப்பால் தசரதன் இருப்பதாகத் தோன்றினாலும், அவனும் சாமான்யன் அல்ல. அமரர் நாட்டையே மீட்டுக் கொடுத்தவன் “சுரர் நாடு ஈந்தான்”(திருஅவ.61). சம்பரன் என்ற அசுரனை வென்று இந்திரனுக்கு அரசு தந்தவன் “இன் தளிர்க்....என்றான்” (பால.கை. 9) அவன் பிள்ளைப் பெற விரும்புவதே தன் நல்லாட்சித் தொடர வேண்டும் என்பதற்காக! (“அறுபதி...அரோ” - பால.திருஅவ.3)அப்படியிருந்தும் தன் மனைவி ‘ஒருத்தி’க்குக் கொடுத்த வரத்திற்காக அந்த ஆட்சியில் பெரும் குழப்பமும், மக்களிடையே கலக்கமும், குடும்பத்தில் புயலும், சொந்த மகன்களுக்கு வனவாசத் துயரும், இதர மனைவிகளுக்கு அமங்கலத் தோற்றமும் தரத் துணிந்து, தன் உயிரையும் போக்கிக் கொள்ள முன்வந்தது சற்றே நெருடத்தான் செய்கிறது. ஆனால் தயரதன் இவற்றை அறியாதவனல்ல என்பதை “குற்றம் அகற்ற.. (அயோ.கை.சூழ்.29) காலில் விழுந்தேனும் “நன்மை நடக்கலாம்” என்ற எண்ணத்தில் செயல்படுகிறான் என்கிறான் கம்பன்.    

பின்னர், தன் குழந்தைகள் இயற்கை வழியிலல்லாது, யாகத்தில் தோன்றிய அமுது காரணமாகப் பிறந்ததாலும், பெயர் சூட்டும்போதே பரம்பொருள், ஒளியென அறுதியிட்ட வசிட்டரின் வழியில் (பால.திருஅவ.117முதல்120வரை) “எது நடந்தாலும், விசுவாமித்திரர் பின்னே தன் மக்களை அனுப்புவது அவர் கூறுவதுபோல “உறுத்தல் ஆகலா உறுதி”, “அளவு இல் விஞ்சை” (பால.கையடை.15,16) விளையவே என்று கொண்ட நம்பிக்கையாலும், இப்போது நடப்பது எந்த விளைவை ஏற்படுத்திடினும், மகத்தான நன்மைஒன்றுக்காகவே என்ற உறுதியாலும் தன் வாழ்வின் போக்கை மாற்ற விரும்பாமல் எல்லாவற்றிற்கும் உடன்பட்டிருக்கலாம். இதை தான் முன்பு பெற்ற சாபத்தின் விளைவு என்று தசரதன் வாயிலாகவே “அந்தமுனி சொற்றமையின், அண்ணல் வனம் ஏகுதலும், எம்தம் உயிர் வீகுதலும், இறையும் தவறா” (அயோ.நகர்87) என்று கூறுகிறான் கம்பன். மாற்ற முடியா ஒன்றுக்காக கழிவிரக்கத்தோடு உடன்படும் தயரதன்  கலங்கித் தவித்து, துயரில் மூழ்கியது  தவிர்க்க இயலாத அவனது மனிதப் பண்பினைப் பறைசாற்றுகிறது.

அடுத்து கம்பன் கண்ட பெண் பாத்திரங்களைக் காண்போம். பெற்றோர் யாரென்று அறியப்படாதவள் சீதை  என்பது பொதுவாக ராமாயணங்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு கருத்து. இதை அடிப்படையாகக் கொண்டு சில சீதையை அவதாரப் பிறப்பென்று கூறுகின்றன. கம்பனும் சீதையை இலக்குமி அவதாரமாகத்தான் கொள்கிறான் என்று கூறப்பட்டாலும் மாறாகக் கொள்ளவும் இடமிருக்கிறது. சனகன் யாக பூமியை உழும்போது “புவிமடந்தை திரு வெளிப்பட்டென” என்றுதான் சொல்லுகிறான்.(பால.கார்.17) இதேபோல பல இடங்களில் ‘ராமனும்-சீதையும்’ கூட குறிக்கப்படுகின்றனர். (உம்: பால.கடி.98) “பண்டைப் பாற்கடல் ஒப்பது ஓர் பள்ளி அணைந்தான்”.

சாதாரணமாக, தன்னை மறந்த இலயத்தில் ஒருவரையொருவர் விரும்பும் காதலர்களை யுகயுகமாய் சேர்ந்தே இருந்தவர்கள் என்றும், இனி வரும் பிறவிகளிலும் இணைந்தே இருப்பார்கள் என்றும், “மன்மதனும் இரதியும்”, “கண்ணனும் ராதையும்”, “உமையொரு பாகனை”ப்போல் பிரிக்க இயலாதவர்கள் என்றும் கூறுவது வெகு இயல்பானது. அது போல கம்பனும் ராமன்-சீதையின் உயிர் ஒன்றிப்புக்கு திருமால்-இலக்குமி இணையரை ஒப்பிட்டிருக்கலாம்: (பால.மிதிலை.38)

      “மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்
   ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்
   கருங் கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
   பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ?”

எப்படியாயினும் சீதை தன் வாழ்வில் ஒரு மானிட பெண்ணுக்குரிய அத்தனை குணநலன்களும் கொண்டவளாக விளங்கினாளே தவிர, எந்த ஒரு நிலையிலும் அந்த இயற்கை எல்லையை விட்டுத் தாண்டவில்லை!ராமனைக் கண்ட மாத்திரத்தில் காதல் வயப்பட்டு, அவனை எண்ணித் தன் கற்பெனும் அரணை இழந்து, அவனை மீண்டும் ஒரு முறையேனும் கண்ணால் காணவும், பின் தன்னையே
இழந்தாலும் அதை ஒரு பொருட்டாக எண்ணாத மனநிலையினை அடைவதிலாகட்டும்(பால.மிதிலை59-‘பிறந்துடை’), திருமணத்திற்கு முன், தன் வசமிழந்து ராமன் பால் செல்லும் மனதைக் கடிந்து (பால.கடி.4) பொருமுவதிலாகட்டும் ஒரு மானிடப் பெண்ணின் காதல் துடிப்பையே காண்கிறோம்.

கணவன் தன்னைத் தனியே விட்டு, வனமேகும் முடிவினைச் சொன்னதும், அரசை இழந்ததற்காகாவோ, அன்றி அவன் காடாளச் செல்வதற்காகவோ வருந்த மறந்து, “தனியே செல்கிறேன்” என்ற வார்த்தையைக் கேட்ட அளவில் வாடித் தேம்பும் அவள் அன்பும் (அயோ.நகர்218), காடு செல்வதற்கு முன் சுமந்திரனிடம் ‘தான் வளர்த்த கிளி’ முதற்கொண்டு பாதுகாக்கச் சொல்லும் பேதமையும் (அயோ.தைலம்.39) பெண்மைக்கே உரிய மென்மையினைக் காட்டுகிறது.

சூர்ப்பனகை ராமனின் மனதைக் கவர்ந்தவள் என்று சீதையைக் கடியும் வேளையில், அஞ்சி ராமனிடம் ஒண்டும்போது அவள் மருட்சியைக் காண்கிறோம் (ஆரணி.சூர்ப்.66). மாயமான் பற்றிய இலக்குவனின் சந்தேகத்தை அவளும் அருகிருந்து கேட்டவள்தான்! அதைப் பற்றி ஆராய ராமன் முன்வராததற்குக் காரணமே தன் மனைவி முதன்முதலாக ஆசைப்பட்ட பொருள் என்பதாக இருக்கலாம். சீதையும் அந்தக் காதல் மயக்கத்தில்தான் ஊடி, ‘நீயே பிடித்து எனக்குத் தரமாட்டாயோ?’ என்று கேட்டு வலிய துன்பத்தில் மாட்டிக் கொண்டாள்.

அடுத்துவரும் படலத்தில் அவளுடைய பல பரிமாணங்களைக் காண்கிறோம். கணவனுடைய உயிருக்கு ஊறு நேர்ந்ததோ என்றெண்ணும் மாத்திரத்தில் நிலை தடுமாறி, தன் வாழ்வையே தியாகம் செய்து விட்டு, அவர்கள் இருவரையும் கண்ணிமை போல் காத்து வரும் இலக்குவனை நோக்கிச் சிறிதும் யோசியாது “உன் செய்கை நெறியற்றது” என்னும் கொடிய சொல்லைக் கூறிவிடுகிறாள்! (ஆரணி.இரா.சூழ்ச்.12) அவளது பதைப்பும், எப்படியேனும் கணவனைக் காக்க வேண்டும் என்ற முனைப்புமன்றி சிந்திக்கும் திறன் அந்த வேளையில் கிஞ்சித்தும் இல்லை என்ற அவளது பலவீனம் அங்கே வெளிப்படுகிறது.

இராவணன் மாறுவேடத்தில் அவளை நெருங்குகிறான். தன் துயரத்தை மறைத்துக்கொண்டு, விரதம் பூண்ட ஒருவருக்கு பணிவிடை செய்யக்கருதி அவனை வரவேற்கிறாள். சாதாரணமாக ஒரு பெண்ணுக்கு ‘ஆசை’யின்பாற்பட்ட ஆணின் நோக்கு (ஆரணி.இரா.சூழ்ச்.26) புரிந்துவிடும். அவளோ தன் தூய மனதால் அதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறாள். அதே நேரத்தில் கடமை உணர்வு மிக்கவளாக இனிதே அவனை உபசரிக்கிறாள் (ஆரணி.இரா.33). ஆனால் தொடர்ந்து அவன் அரக்கர் சார்பில் பேசும்போது அவனோடு வாதிட சற்றும் தயங்கவில்லை. விராதன், கரன் முதலானவர்களுடன் எண்ணற்ற அரக்கர்களின் முடிவைப் பற்றிக் கூறி அச்சமின்றி பேசியவள், அவளையறியாது காருண்ய மிகுதியால் கண்கலங்குகிறாள் (ஆரணி.இரா.சூழ்ச்.56). இறுதியில் தன் சுய நோக்கத்தை இராவணன் வெளியிட்டதும் கற்பின் கனலியாய் “தேவர்க்கிடும் அவிர்பாகத்தை நாய் விரும்பினாற் போல் சொல்கின்றாயே” எனச் சீறுகிறாள்.

இராவணன் இலங்கையில் அவளைச் சிறை வைத்தபிறகு அவள் நிலை பரிதாபத்துக்குரியதாகிறது. தூசு படிந்தவளாய், ஒளி குன்றியவளாய், மனதில் கொண்டக் காதலையும், தன் கற்பைக் காக்கும் உறுதியையும் தவிர வேறெதுவும் இல்லாதவளானாள் (சுந்தர.காட்சி.68). அனுமன் அவளைக் கண்டு கணையாழியைக் கொடுத்ததுமோ, இழந்ததைப் பெற்றவளாய் புது உயிரோட்டம் பெற்றாள் (சுந்தர.உருக்.65). யுத்தமும் முடிந்தது. அனுமன் வந்து செய்தியை அவளிடம் கூறுகிறான். அவள் கொண்ட உவகையை அகமும் முகமும் மலர, நெஞ்சு பூரிக்க, இனந்தெரியா மயக்கத்தால் தடுமாறினாள் என்று கம்பன் (யுத்த.மீட்சி.21-23) விவரிக்கிறான். அனுமன்பால் அவள் கொண்ட நன்றியுணர்வு பெருகி, “தலையால் அவனைத் தொழவும்” தயங்கவில்லை!

தனக்கு விடிவுக்காலம் பிறந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தாலும், தன்னை அதுவரை துன்புறுத்தியவர்களை பழிவாங்க கிஞ்சித்தும் நினைத்தாளில்லை. அவளது கருணை உள்ளம் அரக்கியரை மன்னித்து விட அனுமனைக் கேட்டுக்கொள்ளச் செய்கிறது. (யுத்த.மீட்சி.34-36) அடுத்து வீடணன் அலங்காரத்தோடு, துன்பச் சாயையின்றி தன்னுடன் வரும்படி அழைக்கிறான். அப்பொழுது அவள் சொல்லும் பதில், பிறர் மனதை ஊடுருவி அங்கு எழக்கூடிய தரங்கெட்ட நினைவுகளைப் படித்தறியும் ஒரு மேதையின் பிரகடனமாகத் தோன்றுகிறது. தன் தோற்றம் மாறுவதாலேயே, இதுவரை தானிருந்த நிலையைப் பிறர் உணரமுடியாத சூழல் உருவாகலாம் என்று மிகச் சரியாக கணிக்கிறாள் (யுத்த.மீட்சி.40) இது இராமனின் விருப்பம் என்று வீடணன் கூறியமாத்திரத்தில், ஒரு மனைவிக்குரிய, கணவனின் ஆசையை மறுக்க இயலா பலவீனத்துடன் சம்மதிக்கிறாள்.ஆனால் அவள் பயந்ததே நடந்தது. அதுவும் யாரால்? யாருக்காக அல்லும் பகலும் தவமிருந்து, சொல்லொணாத் துயருடன் காத்திருந்து, வந்து மீட்டு இரட்சிப்பான் என்று நினைத்தாளோ “அவன்” தன் கூரிய வாளெனும் சொல்லால் அவள் இதயத்தைக் கிழித்து விட்டான். உதிரங் கொட்ட, தன் தவமெலாம் விழலுக்கிறைத்த நீராகிப் போன வேதனையில் மயங்குகிறாள்(யுத்த.மீட்சி.70-72). அந்த விரக்தியில் அவள் கேட்கும் ஒரு கேள்வி, “கடவுளரே ஆனாலும், உள்ளங்கை நெல்லிக்கனி போல் எல்லாம் தெரிந்தாலும், மங் கையரின் மனநிலையை அவர்கள் உணரவே மாட்டார்களோ?” என்ற கசப்பின் வெளிப்பாடு, ஆணுலகத்திற்கே ஒரு பதிலளிக்க முடியாத அறைகூவல்!(யுத்த.மீட்சி.76) தீ புகுமுன், “ஒழுக்கம் பாழ்பட, மாண்டிலை” (யுத்த.மீட்சி.62) என்று வாய் கூசாமல் கூறியக் கணவனுக்கு பதில் சொல்வதே போல், தன் உடல் தூய்மை மட்டுமல்ல “மனத்தினால், வாக்கினால் மறு உற்றேன் எனில் என்னைச் சுடு” என்று அக்னித் தேவனிடம் வேண்டுகிறாள்(யுத்த.மீட்சி.84). அதற்குப் பின் அவள் பேசவில்லை! பேசுவதற்கு என்ன இருக்கிறது?

நாயகிக்குப்பின் கதையை நடத்திச் செல்லும் முக்கிய பாத்திரமான கைகேயி, அவளை இயக்கிய மந்தரை இருவரையும் பொதுவாக ‘தீயர்’ என்ற அடைப்புக்குள் அடக்கலாம் என்றாலும், மனித இயல்பின் விசித்திரத்தையே அவர்களிலும் காண்கிறோம். ஆசைப்படுவதும், அதற்காகப் போராடுவதும், வெற்றி காண்பதும், விவேகம் கொள்வதும், மன்னிப்பதும், மறப்பதும் மட்டும் மனிதமல்ல! அசூயை கொள்வதும், பொறாமைப் படுவதும், பழிவாங்குவதும், குழிபறிப்பதும் கூட அந்த வட்டத்திற்குள்தான் அடங்குகிறது. மந்தரை சுற்றம், தனக்கென வீடு, குடும்பம் போன்ற சூழல் ஏதுமின்றி  கைகேயின் பணிப்பெண்ணாக இருக்கிறாள். அதிலும் அங்கத்தில் குறையுடையவள். ‘கூனி’ என்னும் பெயரிலேயே குறிக்கப்படுபவள் என்னும்போது அவள் மனதில் என்னேரமும் வீசக்கூடிய புயலும், தன்னை எள்ளி நகையாடுவோர் மீது கொள்ளக் கூடிய வன்மமும், தனக்கென ஒரு நேரம் வரும்போது அதை பயன்படுத்திக் கொண்டு கருவறுக்க விழையும் தீவிரமும் புரிந்துகொள்ளக் கூடியவை. “பண்டைநாள் இராகவன் பாணி வில் உமிழ் உண்டை” - தன் கூன் முதுகை கேலி செய்யும் விதத்தில் ராமன் எய்த வில்லை அவள் என்றும் மறந்தாளில்லை (அயோ.மந்த.49). வருடக்கணக்கில் நீறு பூத்த நெருப்பாக அவள் கொண்டிருநத கோபம,; ராமன் அரசுரிமைப் பெறப் போகிறான், இனி தன்னால் எந்த வகையிலும் தன் குமுறலைக் காட்டிக்கொள்ள வாய்ப்பின்றி அவன் முன் அடங்கிக் கிடக்கவேண்டும் என்று கேள்வியுற்றதும், பொங்கிப் பெருகியது(அயோ.மந்த.48).

பரதன் ஆள இயலாமற் போனதற்காக வருந்துபவள்போல் அவள் பேசினாலும், அவள் உள்ளக்கிடக்கை, ராமன் அரசனாவதன் மூலம், கோசலை உயர்வடைய, அவளது தாதியர் தன்னை அடிமைப்படுத்துவார்கள் என்பதே அவள் கவலைக்குக் காரணமாயிற்று என்பது (அயோ.மந்த.62) நன்கு விளங்குகிறது. உலக நடப்பின் உண்மையை உணர்த்துவதுபோல, “அற வாழ்வே மேற்கொண்டிருந்தாலும், செல்வம் அவர்களை மாற்றிவிடும். இன்று அன்பாக இருப்பவர்கள் நாளை உன்னை துன்புறுத்தலாம்” (அயோ.மந்த.78) என்று ஐயத்தின் அடிப்படையில் ஆணிவேர் விடும் அச்சத்தை கைகேயியின் உள்ளத்தில் ஊன்றுகிறாள். அதுவே கைகேயியின் மனதில் வளர்ந்து பெரும் விருட்சமாயிற்று.

மந்தரை சொல்லுக்கு செவி சாய்க்காது, “இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ?” (அயோ.மந்த.55) என்று இராமனைத் தான் பெற்ற மகனாகவே எண்ணி பேச ஆரம்பித்தவள், கோசலையைப் போலவே இராமனுக்கு பட்டாபிஷேகம் என்றறிந்து (அயோ.மந்த.59) உவகை கொண்டவள், கீர்த்தி வாய்ந்த குல மரபை பழிக்கிறவளே என்று கடிந்தவள்(72), எனக்கும், என் மகனுக்கும் நீ செய்ய நினைப்பது நன்மையுமல்ல (73) என்று பொரிந்தவள், மந்தரை மேலும் மேலும் ‘கோசலை முக்கியத்துவம் ஆனவளாகி விடுவாள், நீ ஒவ்வொன்றுக்கும் அவள் கையை எதிர்பார்த்து நிற்கும் அபலையாகிவிடுவாய்’ (79,80,81) என்று கூறும் சொற்களில் திரிந்து போகிறாள். என்னதான் நல்லுறவு இருந்தாலும், கணவனைப் பங்கு போட்டுக் கொள்ளும் பெண்களிடையே உள்ளுற ஒரு மனச்சங்கடமும், கணவனின் உள்ளத்தில் அதிக இடம் பெறுவது பற்றிய போட்டி மனப்பான்மையும், அதன் மூலம் சமுதாயத்தில் தனக்குக் கிடைக்கும் மதிப்பில் ஒரு அக்கறையும் இருப்பது தவிர்க்க இயலாதது. இந்த மனத்தத்துவ அடிப்படையில், ‘பிறந்த வீட்டினர் கண் முன்னும் நீ நிலை தாழ்ந்து விடுவாய்’ (82,83) என்று மந்தரை கூறிய உபதேசம் அவள் எதிர்பார்த்த விளைவை உண்டுபண்ணி விட்டது. கைகேயின் மனதில் வீச ஆரம்பித்த புயல், காதல் கணவனின் துயரை (அயோ.சூழ்.17)கண்ணாரக் கண்டும், மனமிளகவோ,சிந்திக்கவோ விடாமல் எல்லாவற்றையும் அழித்தொழிக்க ஆயத்தமாயிற்று! பரதன் நாடாள வேண்டும் என்ற ஆசையைவிட, ராமன் காடேக வேண்டும் என்று கைகேயி தீவிரமாக இருந்ததன் அடிப்படையே ராமன் அரசாள, “கோசலைக்குப் பின்” என்று “தான்” இரண்டாம்பட்சமாகி விடுவோமோ என்ற பயம்தான்.

 பொதுவாக மனித இயல்பை, மக்கள் வட்டத்திற்குள்தான் தேட வேண்டும்;. ஆனால் கம்பன் படைத்த அரக்கரிலும், விலங்குகளிலும் கூட அந்த இயல்புகள் மலிந்து கிடப்பதால் இந்த இரு இனத்தின் தலையாய இராவணன், வாலி போன்றவர்களின் பாத்திரங்களை ஊன்றிப் பார்ப்பது நலம். இவர்கள் மீது உடனடியாகச் சுமத்தக் கூடியக் குற்றம், பிறன் மனைவியை விரும்பியதும், அபகரித்ததும். இந்தக் குற்றத்தை மனிதர்கள் செய்வதில்லை என்று யாராலும் மறந்தும் சொல்;ல முடியாது. என்று மனித குலம் வாழ்வில் ஒரு வரம்பு ஏற்படுத்திக் கொண்டு, ஒருவனுக்கு ஒருத்தி என்ற இலட்சியத்தை நோக்கி நடைபோட வேண்டும் என முயன்றதோ, அன்று முதல் இந்த வரம்பு மீறலும் இருந்து கொண்டுதான் உள்ளது. இதை யாரும் மறுப்பதற்கில்லை! எனவே இதற்கப்பால் இவர்களது குணநலன்களைக் காண்பது நலம்.

சரியாகவோ, அன்றி தவறாகவோ அரசை கவர்ந்து கொண்டான் என்று சுக்ரீவன் மீது பகை கொண்டு, அவன் மனைவியையும் அபகரித்துக் கொண்டான் வாலி. (பரதன் அளவுக்கு இல்லையென்றாலும், அண்ணன் வரவில்லை என்ற காரணத்துக்காக முடி சூட்டிக் கொள்வதை விடுத்து, சுக்ரீவன் அங்கதனுக்கு இளவரசுப்பட்டம் கட்டி விட்டு அவன் சார்பில் அரசு புரிந்திருந்தால் பகையே வந்திருக்காது) சுக்ரீவன் ராமன் துணையுடன் வந்து போருக்கழைக்கிறான். தன் கோழை தம்பியின் கூக்குரல் கேட்டு விழித்த வாலி கோபமுறுகிறான்(கிட்.வாலி.21). தாரை ராமனின் உதவிதான் சுக்ரீவனை பலம் கொள்ள வைத்திருக்கிறது என்றவுடன் தன்னை எதிர்க்கத் துணிந்திருக்கிறான் ராமன் என்பதைக் கூட பெரிதுபடுத்தாது, ஒருவனின் சிறப்பை முழுமனதுடன் ஒப்புக்கொள்கிற பேராண்மையுடன் “அறத்தின் ஆறு எலாம் இழைத்தவற்கு”(கிட்.வாலி.31-32) உன் பேதைமையால் ஊறு சொல்லாதே’ என்று கடிகிறான். ராமனின் தர்மவழியில் அத்தனை நம்பிக்கை அவனுக்கு!

வீராதி வீரனான ராமன் ‘ஒரு குரங்கின் துணை’ வேண்டி, தன்னுயிராகத் தன் சகோதரரை நினைக்கும் மனதை மாற்றி, எங்களுக்குள் நடக்கும் போரில் தலையிடுவானா என்று வினவுகிறான். ராமனின் வீரத்தின் மீது, உறவின் மேன்மையைப் போற்றும் தன்மை மீதுள்ள அசைக்கமுடியா ஈடுபாடு இது. இவற்றினூடே சுக்ரீவனைப் போலல்லாது சிந்திக்கும் திறன் கொண்டவன் என்பதை நிரூபிக்கிறான். இதே நோக்கு, ராமனின் அம்பு உடலில் தைத்தபின்னரும் அவனிடமுள்ளது. இறைவனைத் தவிர வேறு யாரும் இச்செயலைச் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வருகிறான்(கிட். வாலி.71-72). பிறகு யாராகத்தான் இருக்கட்டுமே என்றத் துணிவுடன் தன் மார்பைத் துளைத்த அம்பைப் பிடுங்க முயல்கிறான். அதில் ராம நாமத்தைக் கண்டதும் அயர்ந்தானில்லை. இறைவனாகவே இருந்தாலும் தவறுதல் இயற்கை போலும் என்றெண்ணி நகைத்து, ராமனின் செயலுக்காகத் தான் வெட்கி நாணமுறுகிறான்(கிட்.வாலி.80). மிகவும் மதிக்கின்ற ஒருவர் தவறிழைக்கையில் செய்வதறியாது ஓர் வேதனை கலந்த தலைக்குனிவு ஏற்படுமே, அதை வாலியில் காண்கிறோம்!


ராமனே நேரில் வந்த பிறகும், தன்னைக் கொல்பவன் என்னும் காழ்ப்பின்றி, அதே வேதனை கலந்த கழிவிரக்கத்தோடு, “தீமைதான,; பிறரைக் காத்து, தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ? தாய்மையும் அன்றி நட்பும், தருமமும், தழுவி நின்றாய்!” என்று கேட்கிறான்(கிட்.வாலி.84). அந்த நிலையிலும் ராமன் அறநெறி தவறுவது ஒருவேளை தன் அருமை மனைவியைப் பிரிந்ததால் ஏற்பட்ட தடுமாற்றத்தால் இருக்கலாமோ என்று அனுதாபத்தோடு, ராமன் செய்கைக்குத் தானே ஒரு நியாயம் கற்பிக்க முற்படுவது அவனது பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது(86). எனினும் ராமனுக்குரிய மனுதர்ம நீதியையும், இரக்கத்தையும் அவன் விட்டொழித்த இச்செயலை அவனால் சீரணிக்க இயலவில்லை. ராமனுக்கே இதன் மூலம் இராவணனைக் குற்றம் கூற இடமற்றுப் போகிறதே என்ற அங்கலாய்ப்புடன், “நீ என்னைச் செய்தது ஈது எனில், இலங்கை வேந்தன் முறை அல செய்தான் என்று முனிதியோ?” என்கிறான் (90). அடுத்து அவன் கேட்கும் நேர்மையான கேள்விக்கு ராமனால் பதில் சொல்ல இயலாமல் போனதில் எந்த வியப்புமில்லை! அந்நிமிடத்திலேயே ராமன் மௌனமாகத் தன் தவறை ஒப்புக் கொண்டான் என்றுதான் கொள்ளவேண்டும்.

   “வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்
    வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல்
    பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து
    ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ?”(92)

அடுத்துவரும் பாடல்களில் அவன் கேட்கும் நியாயம் (93-98) ஆணித்தரமாக உள்ளது. ஆனால் ராமன் கூறும் பதில்களில் வாலியின் பெருமையே மிஞ்சி நிற்கிறது எனலாம். எப்போதும் அறிவும், தகுதியும் உடையோரிடத்தே மட்டுமே பண்பையும், மன்னிக்கும் தன்மையையும், ஏற்றருளும் பெருங்குணத்தையும் எதிர்பார்க்கலாம். சுக்ரீவன் எந்தவித குணச் சிறப்பும் இல்லாதவன். அவன் தவறிழைத்தாலும் அது மன்னிக்கக் கூடியது. ஆனால் வாலி எல்லாவகையிலும் உயர்ந்தவன் என்பதையே ராமனின் சொற்களில் அறிகிறோம். ஆய்ந்தறியும் அறிவும், பெருமனமும் கொண்ட நீ “அன்ன தன்மை அறிந்தும் அருளலை: பின்னவன் இவன் என்பதும் பேணலை”(106) - கற்றவர்க்கு அன்பும், கனிவும், பிறன்மனை நோக்கா அறமும் இருக்கவேண்டும், எளியோர் மீது கருணை கொள்வது அறத்தின்பாற்பட்டதே (107,108,109) என்றெல்லாம் ராமன் சொல்லும்போது அத்தனை நலன்களும் உடையவன் வாலி, தம்பி மீது கொண்ட கோபத்தால் தன் அறத்தையும், கருணையையும் அந்த வேளையில் மறந்துவிட்டான் என்பதே உண்மையெனத் தெளிவாகிறது.மாயை இன்னும் வாலியின் கண்களில் திரையிட்டிருந்ததால் மேலும் தன் விலங்கியல்பையே தன்னியல்பாக எண்ணி வாதிடுகிறான்(கிட்.வாலி.111-114).

இங்கு ராமன் கூறிய பதில் எல்லா மானிடருக்கும் பொருந்தும். கூரிய அறிவோடு பற்பல விதங்களில் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்த வாலியின் வாதமே அவனது பகுத்துணரும் வலிமைக்குச் சான்றாகிவிட்டது. அதனையே அடிப்படையாகக் கொண்டு(119), “அறத்தின் தன்மையை அறிந்த நீ, ஐம்புலன்களாலான உடலைச் சார்ந்தவன் ஆவாயோ?” (115-116) செய்யத்தக்க செயல்களை அறியாத மனிதரும் விலங்கினமே, நன்னெறியில் நடந்தால் விலங்குகளும் தேவரே!”(120) என்கிற மாபெரும் தத்துவத்தை ராமன் புகல, வாலியிடம் மாற்றம் தெரிகிறது. இடையே இலக்குவன், ராமன்  மறைந்து நின்று அம்பெய்தியதற்குக் காரணம் முன்பே சுக்ரீவனுக்கு அபயம் அளித்து விட்டதே என்று சொல்லும் சமாதானம் ஒரு வேளை இக்கேள்விக்கு பதில் கூறவேண்டுமேயென கம்பன் நினைத்ததால் இருக்கலாம்.

ஞானமுற்றவருக்கு எளிமையும், பணிவும் உடன் கைவந்து சேரும். ‘தன்னை’ அறிந்த வாலி, “அறமும், நடுநிலைமையும், நற்குண நிறைவும், நேர்மையும் இழிந்த நிலையுடைய எமக்கு முற்றிலும் கைவருமோ? “தாய் என உயிர்க்கு நீயே நல்கி” (127) உணர்த்தினாய் என்று இதுவரை வாதாடியதெல்லாம் அர்த்தமற்றதாகி, உலக நாட்டங்களையெல்லாம் துறந்து சிறியன சிந்தியாதான் ஆகிறான்! இந்த முக்தி நிலையை மிக அழகாக வாலியின் மனமாற்றம் காட்டுகிறது. பரம்பொருள் அருளைப் பெற்றபின் மனம் இன்னும் விசாலமாகி பிறருக்கான நல்லதை நினைக்கும். அவ்வகையில் “தருமமே உருவமா”ன (132) தெய்வதரிசனம் பெற்ற தனக்கு வீடுபேறு உறுதி என்ற நிறைவில், சுக்ரீவன் தவறிழைத்தால் பொறுக்கும்படியும்(134), அனுமனைக் கொண்டு சீதையைத் தேடும்படியும்(137), கூறி தன் குமாரனாகிய அங்கதனுக்கு பரம்பொருளையும்

  “பாலமை தவிர் நீ என் சொல் பற்றுதிஆயின், தன்னின்
  மேல் ஒரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கி
  கால் தரை தோய நின்று கட்புலக்கு உற்றது அம்மா!
  மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த!”

என அறிமுகப்படுத்தித் தன் மகனை ராமனுக்கு அடைக்கலமாக்கி கடமைகளை நிறைவேற்றிய முழுமை உணர்வோடு உயிர் துறக்கிறான். கம்பன் வாலியின் மரணத்தை “உலகம் ஏழும் ஏத்தின. இறந்து வாலி அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்” (159) என்கிறான்! வாலியின் சிறப்புக்கு இது ஒரு உரைகல்!

இனி ராமனுக்கிணையான சிறப்புகளும், அதற்கு சற்றும் குறையாத காம உணர்வும் கொண்ட இராவணனைக் காண்போம். இந்த இருவேறு துருவத்திற்கொப்ப உள்ள வேறுபாட்டைக் கொண்டவன் இராவணன் என்பதை அவனை அறிமுகம் செய்விக்கும் முதல் பாடலிலேயே கம்பன் சொல்லிவிடுகிறான். திரிமூர்த்திகளாலும் வெல்லப்பட முடியா வரபலம், தங்கள் அழகால் எல்லோரையும் வெல்லும் மகளிரின் அடிபணியாத் திண்மை கொண்டவன் (ஆரண்.சூர்ப்.3). இந்தச் செருக்கின் மிகுதியால் அவன் இன்மொழி கூறினும், கின்னரர் பயம் கொள்வர் (10). திக்கயங்களை வென்று மேரு மலையைப் பெயர்த்தவன் (12) மூவுலகையும் தன் அளவிலா ஆற்றலால் தன்கீழ் பெற்றவன், மாதர்களின் பார்வை வெள்ளத்திடை வீற்றிருந்தான் (23). இந்த வர்ணனைகளிலேயே அவனது குணநலனை நாம் புரிந்து கொள்கிறோம்.

இத்தகையோன் முன்   சூர்ப்பனகை வந்து மூக்கறுபட்ட நிலையில் நிற்கிறாள்! தங்கையின் கோலம் கண்டு அவன் எப்படி சினம் கொண்டிருப்பான் என்று ஊகிப்பது கடினமல்ல. (ஆரணி.சூர்ப்.49) கோபமுற்று இடிமுழக்கம்போல் “இது யாருடைய செயல்” என்று வினவுகிறான். தங்கையின் பதிலில் நம்பிக்கைக் கொள்ளாது “பொய் தவிர், பயத்தை ஒழி, புக்க புகல்” (51) என்கிறான்.  பலவாறாக அவள் புனைந்த கதையைக் கேட்டபின்னரும், “நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல், நின்னை, இன்னே, வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய” (66) என்று வினவுகிறான். என்ன இருந்தாலும் வளம் நிறைந்த நாட்டைத் திறம்பட ஆளும் அரசனல்லவா?

தமையனின் குணமறிந்து சீதையின் அழகைப்பற்றிய மோகத்தை அவனுள் ஊன்றுகிறாள் சூர்ப்பனகை. (ஆரணி.சூர்ப்.67-80) அதனால் விளைந்த காமம், தங்கைக்காக எழுந்த கோபம், கொதிப்பு அத்தனையையும் மறையச் செய்து விட்டது(82). காமம் எப்படி எல்லாவற்றையும் சீர் தூக்கிப் பார்க்கும் இயல்பை அழித்துவிடுகிறது என்பதை மிக அழகாக,

“கரனையும் மறந்தான் தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி
அரனையும் கொண்ட காமன் அம்பினால், முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான்” (83)

கம்பன் கூறுகிறான். இந்த இடத்தில் மனித குலத்திற்கு இருக்கவேண்டிய ‘ஞானம்’ எத்துணை அவசியம் என்பதை துல்லியமாகக் காணலாம். எவ்வளவு கூரிய மதி இருந்தபோதும், நற்பண்புகளும் சிறப்புகளும் இருந்தபோதும் “ஞானம் அதாவது நன்மை-தீமை பற்றிய உயரறிவு” இல்லையேல், காமத்தை வெல்வதும் இயலாது (84) அதன்பாற்பட்டு ஏனைய சிறப்புகளை இழப்பது தொடர்வதைத் தவிர்க்கவும் இயலாது. இப்படித் “தெளிவு இல் நெஞ்சன்” “சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன்” ஆகத்தான் இருப்பான்(170). இதன் முதற்படியாகத் தன் வலிமையை மறந்து ஒரு கோழை போல மாரீசனின் துணை வேண்டி, தன்னையேத் தாழ்த்திக் கொண்டு மன்றாடுகிறான் இராவணன்(ஆரணி.மாரீ.3-6). இங்ஙனம் தனக்கு அவமானத்தைத் தானே தேடிக்கொள்ளும் அவல நிலையைக் கூட அவன் உணரவில்லை. தன் ஆவலை எப்படியும் நிறைவேற்றிக்கொண்டே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில் பின்னர் மாரீசனை இகழ்ந்தும், ராம இலக்குவனரை ஏளனம் செய்தும் பேசுகிறான் (27-28). “நெஞ்சம் தருக்கினர் கெடுவர்”(31) மாரீசன் இராவணனின் செருக்கே அவனை அழிக்கப் போகிறது என்றெண்ணியதாகச் சொல்கிறான் கம்பன் (31).

காணாமலே காமம் கொண்டுவிட்டவன், அந்தப் பேரெழிலை நேருக்கு நேர் காண்கிறான். “பொற்பினுக்கு அணியினை, புகழின் சேக்கையை, கற்பினுக்கு அரசியை” கண்ணால் காண்கிறான்! இந்த இடத்தில் “அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன்” (ஆரணி.இரா.சூழ்ச்.26) என்று கம்பன் அவனைக் குறிப்பிடுகிறான். அந்த வேளையில் அவனையறியாமலே அவளது தூய்மை, அன்பலை புரளும் ஆசையுடையவனாக அவனை மாற்றிவிட்டது போலும்! அவன் நினைத்திருந்தால் தன் எண்ணம் நிறைவேறும்வரை கபட சந்நியாசியாகவே சீதையிடம் நாடகமாடியிருக்கலாம். ஆனால் அன்பு தோன்றிவிட்டால் அங்கு பொய்க்கு வேலையில்லை. அதனால் தன்னையறியாது தன்னைப்பற்றிய உண்மைகளைச் சொல்ல ஆரம்பிக்கிறான்(41-47). எத்தகைய உயர்ந்தோனாகிலும் ஆசை மீதூறும்போது, தான் அடைய விரும்புகிறவள் முன் மண்டியிடத் தயங்காதது இயற்கை. அன்று மகளிரின் ஊடலுக்கு முன் அடிபணியாதவன் இன்று சீதையின் கடைக்கண் பார்வைக்காக அவளை வணங்குகிறான்:

“அணங்கினுக்கு அணங்கனாளே! ஆசை நோய் அகத்துப் பொங்க,
 உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி, உம்பர்க்
கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள்’ என்னா,
வணங்கினன்-உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான்” (70)

சீதை தொடர்ந்து எதிர்மறையாக வாதிடவே தன் இயற்கைக் கோபம் கிளம்ப, “தீவிடத்து அரவம் உருகெழு சீற்றம் பொங்கி, பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான்” (63). அடுத்து அவளைக் கவர்ந்து செல்லும்போது, “இழிந்த மனிதர்களுடன் போரிடுவது கயிலையைப் பெயர்த்தெடுத்த எனக்கு பழிதரும். ‘அதனின் வாலப் பயன் தரும் வஞ்சம்’(83) என்று சொல்வது அவன் எந்த அளவு ஆசையால் சித்தம் மயங்கி சிந்திக்கும் திறன் இழந்திருக்கிறான் என்பதைக் காட்டுகிறது.

போர் நிச்சயம் என்றாகி விட்டது.  போரிடத் துணியும் கும்பகர்ணன், இந்திரசித்து ஆகியோர் முதலில் இராவணன் மனதை மாற்ற முயல்கின்றனர். அவனோ அவர்களைப் பரிகசித்து இழுக்காகப் பேசுகிறான். இதன் உண்மைக் காரணத்தை அவன் வாயிலாகவே “என்னையே நோக்கி, யான் இந்நெடும் பகை தேடிக் கொண்டேன்”(யுத்த.இந்திர.8) அறிகிறோம். மிக உச்சியில் இருக்கும் சிலரால் தங்களைச் சுற்றி அமைத்துக்கொண்ட புகழ் அரணைவிட்டு வெளிவர இயலாது. இதை இராவணன் தெளிவாகவே தன் மகனிடம் கூறுகிறான்: “உலகு எலாம் பெயர, பேராக் காதை என் புகழினோடு நிலைபெற, அமரர் காண, மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால், சீதையை விடுவது உண்டோ, இருபது திண் தோள் உண்டால்?”(9-10)

இந்திரசித்து இறந்துவிடுகிறான். இங்கு ஒரு பாசத் தந்தையின் பரிதாப நிலையை, அதுவும் தன் தவறால் மகனை இழந்து நிற்கும் ஒரு குற்றம் புரிந்த மனிதனின் உணர்வினை இராவணனிடம் காண்கிறோம்.(யுத்த.இரா.சோ.39)

  “சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம் மேவி,
   நினைத்தது முடித்து நின்றேன் நேரிழை ஒருத்தி நீரால்,
   எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி,
 உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?”

இறுதியாக இராவணன் தானே போருக்குப் புறப்படுகிறான். முடிவு தெரிந்தவனாக, தன் இறுதி யாத்திரைக்கு முன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்பவன்போல், அமைதியான மனதோடு முறையாக பூசை செய்து, வேதம் சொல்லும் தானங்களை அளித்து, விரும்புபவர்க்கெல்லாம் வேண்டியதைக் கொடுத்து நிறைவுடன்(யுத்த.இரா.தேர்3) கிளம்புகிறான் இத்தகு மனநிலை பெறவும் ஒரு தகுதி வேண்டும். அத்தகுதி பூரணமாக இராவணனிடம் இருந்ததால்தான் ராமனால் தன் சூலம் பொடிப்பொடியானதுமே,

    “சிவனோ? அல்லன். நான்முகன் அல்லன். திருமாலாம்
    அவனோ? அல்லன். மெய் வரம் எல்லாம் அடுகின்றான்.
    தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்.
  இவனோதான் அவ் வேத முதல் காரணன்? என்றான் (யுத்த.இரா.வதை.134)

முழு முதல் இறைவனோ என்ற ஐயம் வந்து விட்ட போதும், அவன் மீண்டும் போரிடத் துணிந்ததை (135) இரு வேறு வகைகளில் காணலாம். ஒன்று அவனது “தான்” என்ற மமதை அழியாததால் எனலாம். இல்லையேல் பரம்பொருளை உணர்ந்துவிட்ட பின் தன் செயல், அதற்கான பலன் என்று ஏதுமில்லை. இங்கு என் கடன் போரிடுவதே என்ற மெய்யுணர்வாலும் இருக்கலாம். ஏனெனில் இறந்த பின் அவனைப் பற்றி கம்பன் புனைந்த கவிதையின் அழகே அத்தலைவனின் மன அழகை வெளிப்படுத்துவதாயுள்ளது:


   “வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க, மனம் அடங்க, வினையம் வீய,
  தெவ் மடங்க, பொரு தடக் கைச் செயல் அடங்க, மயல் அடங்க, ஆற்றல் தேய,
   தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா, நிலை அடங்கச் சாய்த்த நாளின்
   மும் மடங்கு பொலிந்தன, அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா!”(யுத்த.இரா.வதை.199)

வாழ்நாளெல்லாம் சீருடனும், சிறப்புடனும் வாழ்ந்து விட்டு, தன் ஒரே தவறால் பெருமையிழந்த அந்தப் பெருமகனின் பொலிந்த முகம், மனத்தளவில் அவன் எல்லாச் சிறைகளினின்றும் விடுபட்டு வீடுபேறு பெற்றுவிட்டான் என்பதையே காட்டுகிறது.

கம்பனின் சொல்லோவியம் அவன் எந்த அளவு மனித இயல்புகளை ஊன்றிக் கவனித்து, அதில் திளைத்து, மனதில் உள்வாங்கியிருக்கிறான் என்று நமக்குச் சொல்கிறது. அதுமட்டுமல்ல, அவன் தன் பாத்திரங்களினூடே வாழ்ந்து, அவர்கள் அனுபவங்களைத் தானும் உணர்ந்திருப்பதால்தான் அத்துணை இயற்கையாக, அத்துணை இயல்பாக, அத்துணைத் துல்லியமாக அவர்களைப் படைக்க முடிந்தது. காலங்காலமாய் ‘இராமாவதாரம்’ நிலைத்து கம்பனின் புகழைப் பரப்புவதும் இச்சிறப்பால்தான்!

   

                                         

                   பேரின்ப வீடு
                     
இந்த உலகில் உள்ள சீவராசிகளில் சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே. விலங்குகளுக்கு உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் முன் பகுதி (pசநகசழவெயட உழசவநஒ) வளர்வதில்லை. அதனால் பசி,தாகம்,உடலுணர்வு இவை ஏற்பட்ட உடனேயே செயலில் ஈடுபடுகின்றன. ஆனால் மனிதனுக்கு 22 முதல் 24வயதுக்குள் அது வளர்ந்து பக்குவப்பட்டு, உணர்வுகளை சிந்தனையால் கட்டுப்படுத்தும் திறன் உண்டாவதால்தான் மனிதனை மகத்தான, இறைவனின் உன்னத படைப்பு என்று சொல்லிக் கொள்கிறோம். இதன் உதவியால் எது சரி, எது தவறு என்று பாகுபடுத்தி, நல்லதை ஏற்று, அல்லாததை விலக்குகிறோம். இந்த “உணர்வுக் கட்டுப்பாட்டுத் திறன்” காரணமாக எதையும் சாதிக்கலாம் என்கிறார்கள். இதன் உச்சக் கட்ட சாதனையே “பரம்பொருளை அறிதல்”. ஏனெனில் ஐம்புலன்களால், கைகால்களால் நம் இயக்கத்தை நாம் கட்டுப்படுத்திக் கொண்டாலும், ‘இதயம்,இரைப்பை,ஈரல்,சிறுநீரகம்,குடல்கள் போன்றவற்றின் இயக்கங்களை நிர்வகிப்பது-இவற்றுக்கெல்லாம் மேலாக ‘மனம்’, அதன் செயல்பாடு,  அதனால் விளையும் மகிழ்ச்சி, வேதனை இவற்றுக்கெல்லாம் காரணம் அந்த “மூலப் பொருள்” என்று நம்புகிறோம். இந்த எண்ணம் அதைப்பற்றி அறியும் ஆவலைத் தூண்டுகிறது.

சொர்க்கம், மோட்சம் என்றெல்லாம் ஆயிரம் முறை பேசுகிறோம். மனித வாழ்வின் குறிக்கோள் அதுதான் என்றும் அதற்காகவே படைக்கப் பட்டிருக்கிறோம் என்றும் சொல்கிறோம். நாம் செய்யும் நல்ல காரியங்களெல்லாம் அதற்கான புண்ணியங்கள் என்று நினைக்கிறோம். கோவில், பூசை முதலானவை கூட அந்த பேரின்ப வீட்டுக்கான படிகள் என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கை மட்டும் இல்லையென்றால், உலகில் ஒரு கட்டுக்குள் நெறிபட்ட வாழ்க்கை நடத்துபவர்கள் மிகக் குறைந்து விடுவார்கள் என்பதில் ஐயமில்லை! ஆனால,;
   “நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே
  சுற்றி வந்து முணுமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா!
  நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
  சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”

என்ற சிவவாக்கியரின் கேள்வி சிந்தனைக்குரியது. உள்ளம் ஒன்றிய உணர்வில்லையேல் நாம் செய்யும் அத்தனையும் வீண். மனத்துள் இருக்கும் இறைவனை அறியாமல் வெளியே சம்பிரதாயமாகச் செய்யும் காரியங்கள் அவனை அடைய உதவப்போவதில்லை. நம்முள் இருக்கிறான் என்னும் நம்பிக்கையே உள்நோக்கி அகக்கண் கொண்டு ஆண்டவனைத் தரிசிக்க வைக்கும்.

ஆனால் ‘நம்பிக்கை’, எத்தகையது என்பதில் கண்கூடான வித்தியாசங்கள் உண்டு. சிலருக்கு தன்னால் தீர்க்கமுடியாத பிரச்னைகள் வரும்போது மட்டும், சிலருக்கு இன்ப,துன்பமென்னும் உணர்வுகள் தாக்கும்போது மட்டும், இன்னும் சிலருக்கு எந்த நிலையிலும் என்று நம்பிக்கை கொள்ளும் நேரமும், அளவும் மாறுபடுகின்றன. இன்னும் சிலருக்கு அவர்களது அனுபவங்கள், ‘நம்பிக்கைக் கொள்ளாமல் இருக்கமுடியாத அளவுக்கு’ அமைந்து விடுகின்றன.   பொதுவாக மரணத்துக்குப்பின் நமது ஆன்மா செல்லுமிடம் ‘மோட்சம்’ அல்லது ‘நரகம்’ என்பது பரவலானக் கருத்து. நாம் செய்யும் செயல்களுக்கு (வினை) ஏற்ப இரண்டிலொன்று கிடைக்கும் என்பது இதன் அடிப்படை. அதனாலேயே இதையடைய போதுமான காலம் இருப்பதாக எண்ணுகிறோம். ‘இளம்பருவத்தில் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியது எவ்வளவோ உள்ளது’ என்று நாமே இளைய தலைமுறைக்கு விலக்களிக்கிறோம். வயதானவர்களைப் பார்த்து, ‘போகும் காலம் வந்து விட்டது, இனி ‘பூசை, புனஸ்காரம்’ என்று கழிக்க வேண்டியதுதானே!’ என்று மறைமுகமாக ஒதுக்குகிறோம்.

பக்திக்கு வயது ஒரு வரம்பு அல்ல என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. திருஞான சம்பந்தர் மூன்று வயதிலேயே ஞானம் பெற்றார் என்றறிகிறோம். டொமினிக் சாவியோ இளம் வயதிலேயே அசைக்க முடியாத பக்தி உள்ளவராக இருந்தார் என்று படிக்கிறோம். மரியாள் தன் ஆன்ம வேட்கையால் கன்னியாகவே வாழ்ந்து இறை உணர்வில் திளைக்க விரும்பினாள் என்றும் ஆண்டாள் தன்னையே இழந்து இறைவனில் உருகினாள் என்றும் அறிவோம். காரைக்காலம்மையாரின் இளவயது பக்தியே அவரது வாழ்க்கைப் போக்கை மாற்றியது. லிஸியேவின் குழந்தை தெரசா,‘மதர் தெரசா’ என்றழைக்கப்பட்ட ஆக்னஸ் என இளவயது பக்திமான்களின் பட்டியல் நீளமானது.

பின் ஏன் எல்லோராலும் இவ்வுயர் நிலையை அடைய முடியவில்லை? ஒரு வேளை அவர்களெல்லோரும் ‘கருவிலே திருவுற்றவர்கள்’, இறைவன் சிறு வயதிலேயே அவர்களை ஆட்கொண்டுவிட்டார் என்று கூறலாம். ஏனெனில் இறைவன் அருள் அல்லாமல் ஆன்மா முக்தி யடைவதென்பது இயலாததே! கொடுப்பவர் ஒருவர் இருந்தால் அதை ஏற்பவர் ஒருவர் இருந்தே ஆகவேண்டுமல்லவா? நாம் நம் உள்ளத்தை இறைவனுக்கு அளிக்க முன்வரும்போது, அவர் அதை ஏற்பார் என்றும் நம்புகிறோம். ஏற்பவரே முன் வந்து கொடுக்கத் தூண்டுவதுமுண்டு. “அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்” என்கிறது பைபிள். இங்கே, அவர்கள் மட்டும் எந்த விதத்தில் அதற்குத் தகுதியானார்கள் என்ற கேள்வி எழுவது நியாயமே! முற்பிறவிப் பயன் அல்லது கடவுள் சித்தம் என்று எது சொன்னாலும் நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடியப்போவதில்லை! ‘உடல் எடுத்து விட்டால் முன் சென்மத்தில் எந்தத்தசையில் (இது பிறக்கும் நட்சத்திரத்தைப் பொறுத்தது என்கிறார்கள்) உடலை விட்டோமோ, அதன் தொடர்ச்சியை இப்போது மேற்கொள்கிறோம்’ என்று சோதிட சாஸ்திரம் கூறுகிறது.  முற்பயன் என்று சொன்னால் ‘எந்த நற்செயலை அல்லது பாபத்தைச் செய்தோம்’ என்றே தெரியாத நிலையில் வெகுமதியோ, தண்டனையோ எப்படி நீதியாகும் என்ற கேள்வி எழும். கடவுள் சித்தம் என்றால் ‘எந்த அடிப்படையில் ஒருவர் உல்லாசமும், ஒருவர் உபாதையும் பெறுகிறார்’ என்ற விளக்கம் கிடைப்பதில்லை. அதனால் வளர்ந்த,  சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் பற்றி மட்டுமே நாம் யோசிப்பது நல்லது.

கோடிக்கணக்கான மனிதர்களில், குறிப்பிட்டுச் சொல்லும்படி ஆங்காங்கே ஒரு சிலர் அவதரிக்கிறார்கள். சராசரி மனிதத்தரத்திற்கு மீறி அவர்களால் மட்டுமே சாதனைப் படைக்க முடிகிறது. உலகியல் கண்ணோட்டத்தில் முன்னேற்றம் அல்லது புகழ் பெறுவதை இங்கே கணக்கில் கொள்ளக் கூடாது. ஏனெனில் “சத்வகுண ஆசைகள் எவ்வளவு உயர்ந்தவையாக இருந்தபோதிலும், அவைகளும் ஞானத்திற்கு ஒரு திரையே!” பணம் சேர்ப்பதும், ஊர்மெச்ச வாழ்வதும் இறுதியில் ஒருவனோடு செல்வதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. உலகையே ஆண்ட மன்னர்களும், அறிவால் உயர்ந்த விஞ்ஞானிகளும் கூட தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஒரு நிலையில் வெறுமையை உணர்ந்திருக்கிறார்கள். அசோக மன்னன், எத்தனையோ போர்க்களங்களைக் கண்டவன், கலிங்கத்துப் போரில் மட்டும் அதன் விளைவுகளைக் கண்டு மனம் பதைத்ததேன்? அந்தச் சோகம் அப்போது மட்டும் அவன் மனதைக் கௌவியது ஏன்? சுகபோகங்களைத் துறந்து செல்ல ஒரு சக்கரவரத்தியைத் தூண்டியது எது?

தன்னைத் தான் ‘அறிய’ விரும்பும் மனம், இந்த உலக சுகங்கள் நிலையற்றவை என்று உணரும் போது தனக்குச் சொந்தமில்லாத அவற்றை விட்டுத் தானாகவே விலக ஆரம்பிக்கிறது. “குழந்தைப் பருவத்தில் நான் செய்த செயல்களை வளர்ந்தபின் விட்டுவிட்டேன். அதை நினைக்கையில் வெட்கப்படுகிறேன். அவை எத்தனை அபத்தமானவை என்று புரிகிறது”என பைபிளில் காண்கிறோம். அது போல நம் மனம் முதிர முதிர நமது ஆசைகள் எவ்வளவு பொருளில்லாதவை என்று தெரியும்போது, இயற்கையாகவே அடுத்து என்ன என்ற கேள்வி பிறக்கிறது. இந்தத் தேடல் பலவகைகளில் தொடர்கையில், திடுமென அதற்கான பதில் எந்த உருவிலேனும் கண்முன் நிற்கிறது. இந்த அனுபவத்தை அடைய துறவற நிலையோ அன்றி ஆழ்ந்த பக்தி ஈடுபாடோ கூடத் தேவையில்லை. நாம் ஒவ்வொருவரும் ‘அந்த நொடி’யினை பலமுறை வாழ்க்கையில் கடக்கிறோம். ஒவ்வொரு முறையும் அதை நினைத்து வியந்து, விளக்க முடியாத அந்த நிலைக்கானக் காரணத்தைக்‘கடவுள் அருள்’ என்றோ ‘அதிர்ஷ்டம்’ என்றோ ‘நல்ல வேளை’ என்றோ போற்றுகிறோம். அவ்வளவுதான்! மீண்டும் ‘நான்’,‘எனது’, ‘எனக்காக’ என்ற போர்வையில் அமிழ்ந்து போகிறோம். போட்டி, பொறாமை, வஞ்சகம், அகங்காரம், கர்வம் என்ற அன்றாட உணர்வுகளில் மூழ்கிப் போகிறோம்.

மாறாக, நம் தேடல் தொடர்ந்திருக்குமாயின், சற்றே விழிப்பாகச் செயல்படுவோமாயின் நாம் வேறு பாதையில் செல்ல ஆரம்பிப்போம். தூங்கிக் கொண்டிருக்கும் மனதை இறைவன் தன் தூண்டுதலால் தட்டி எழுப்புகிறார். எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் சுடரைத் தூண்டுகோலால் அதிகரிப்பது போல. அந்த ‘வினாடி’யைப் பற்றிக் கொள்ளும் மனம் பிரகாசமாக எரிய ஆரம்பிக்கிறது. ‘இங்கே’ தெளிந்த ஒன்று ‘அங்கே’ உண்மையில் கலக்கிறது. அந்தப் பரவசத்துக்கு முன் எல்லாமே துச்சமாகத் தெரிகின்றன. மிகப் பெரிய சாம்ராஜ்யமும் தூசாகப் படுகிறது.

“கண்டறியாதனக் கண்டேன்;..தேடிக் கண்டுகொண்டேன்” என்கிறார் அப்பர். “தித்தித்திருக்கும் அமுது கண்டேன்” என்கிறார் அருணகிரியார். “மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே” என்கிறார் மாணிக்கவாசகர். “சந்திரனொளியில் அவளைக் கண்டேன்-சரணமென்று புகுந்து கொண்டேன்” என்று மகாசக்தி பற்றிப் பாடுகிறார் பாரதியார். மண்ணுலகில், சாதாரண மனிதர்களாக வாழ்ந்த இவர்களது கூற்றில் அசாதாரணமான அனுபவம் ஒன்று தௌ;ளத்தெளியப் புலனாகிறது.

இவர்களும் இன்னும் பலரும் பலவிதங்களில் இறையனுபவம் பற்றிப் பேசியும் அதை நாமும் அடைந்தே தீரவேண்டும் என்ற தாகமும், வேகமும் நமக்கேன் ஏற்படவில்லை? உள்ளார்ந்த விதமாக இவற்றை நாம் பூரணமாய் உணரவில்லை என்பதே உண்மை. இதில் நம்பிக்கை ஏற்படவில்லை என்பதே பொருந்தும். நாமும் வேண்டுகிறோம், வேண்டுவது சில சமயங்களில் பலிக்கவும் செய்கிறது, அதற்கு நன்றியும் கூறுகிறோம்-ஆனால் இவர்கள் சொல்லும் அதீதபாவனை நமக்கு ஏற்படவில்லையே! இது உண்மைதானா அல்லது சொல்பவர்களது கற்பனையா என்ற சந்தேகம். இந்த ஐயமே நமக்குத் தடை. ஏனெனில் இறைமை பற்றிப் பேசுபவர்கள் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. இதனால் தான் நாம் குழம்பிப் போகிறோம். நம்மைப் பொறுத்தவரை ஒவ்வொரு தத்துவமும் சாராம்சம் ஒன்றேயாயினும் வேறு வேறு திரைகளால் மூடப்பட்டிருக்கிறது. இதுதான் மாயை. அதைக் கிழித்தெறிந்து சத்தியத்தைக் காண நமக்குப் பக்குவமும் இல்லை, அதற்கான பொறுமையும் இல்லை!

முயற்சி எதுவாயினும், பின்பற்றிய முறைகள் எவையாயினும் அவர்கள் கண்ட முடிவு ஒன்றே! பெற்ற இன்ப உணர்வு ஒன்றே! இனிப்பு வகைகள் பல பெயரில் இருந்தாலும் எல்லாம் சர்க்கரையே என்பது போல, மரம் எதுவானாலும் நிழலின்பம் ஒன்றே என்பது போல, ஆணும், பெண்ணும் பல உருவில் இருந்தாலும் அடையும் உடலின்பம் ஒன்றே என்பது போல இறையனுபவம் எப்படியிருந்தாலும் இறுதியில் அடையும் பேரின்பம் ஒன்றே! இந்தப் பிறவிப் பயனை அடைந்த ஒருவர் தான் கடைப்பிடித்த வழியைப் பிறருக்குச் சொல்லும் முறையே பக்தி, மார்க்கம், மதம், மரபு, சம்பிரதாயம் என்றெல்லாம் பலவிதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இவையத்தனையுமே ‘தெய்வத்தை நம்புதல்’ என்ற ஒரே நோக்கைக் கொண்டவை.  

தெய்வம் இருப்பதை நம்புகிறோம், அதை அடைய விரும்புகிறோம், முயற்சிக்கிறோம் எல்லாம் சரி. ஆனால் பலன் காண முடியவில்லையே! “இறைவனிடம் கையேந்துங்கள்;-அவன் இல்லையென்று சொல்வதில்லை” என்றொரு பாடல். உண்மைதான் ஆனால் பருவம் பார்த்து, பாலோ-சோறோ ஊட்டும் தாய் போன்றவன் அவன். நமக்கு எந்த வேளையில் எது கொடுக்க வேண்டும் என்ற அவன் ‘கணிப்பு’ நமக்குப் புரியாததால்தான், ‘நானும் வேண்டாத தெய்வமில்லை! அவன் ஏனோ கல்லாகவே இருக்கிறான்’ என்று புலம்புகிறோம். இன்னொரு முக்கியமான தகுதியும் நமக்கு வேண்டும். அதாவது “நாம்” அந்தப் பொங்கி வரும்  “பேரருள்” பெறத் தயாரான பக்குவத்தில் இருக்க வேண்டும். தாகூரின் கீதாஞ்சலியில் “தெய்வம் கருணைக்கடல் என்பதில் ஐயமில்லை. ஆனால், அதினின்று மொண்டு வர நீ வைத்திருக்கும் பாத்திரத்தைப் பொறுத்தது அது” என்கிறார். பாத்திரம் ஓட்டையாகவோ அன்றி மிகச் சிறியதாகவோ இருந்தால், அதற்கேற்றாற்போல்தான் பலனும் இருக்கும். பக்தனின் பக்குவத்தை அவன்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இறை அம்சமான அவனுக்கு அந்தப் பொறுப்பும், கடவுளை நோக்கி முதலடி எடுத்து வைக்கும் கடமையும் தரப்பட்டுள்ளது.

மனப்பக்குவம் என்றால் அதை அடைவதெப்படி? முதலில் மனம் என்றால் என்னவென்று பார்ப்போம். ஆன்மாவால், ஆவியால், நினைவால், எண்ணத்தால், மூளையால், புத்தியால் உள்ளார்த்தமாக உணரப்படுவது மனம் என்று அகராதி கூறுகிறது. இத்தனையும் ஒன்று சேர்ந்தது என்றே கொள்வோமே! எப்படியோ “நாம்” என்று நம்மை உணரவைப்பது மனம். ஏனெனில் நமது ‘உடல்’ “நாம்” அல்ல. மனம் உடல் மீது கொண்ட பற்றால் “நான், எனது” என்ற சுயநலமும், அதற்கெதிரான செயல்கள் நிகழும்போது கோபம், வருத்தம் முதலிய விளைவுகளும் ஏற்படுகின்றன. உடல் எந்த நிலையில் இருந்தாலும் (வியாதியுற்றோ, ஊனமுற்றோ, வயோதிகமுற்றோ இருந்தால் கூட) மனதால் இளமையாக, அழகாக, திடமாக இருக்க முடியும். பிறர் முன் நமக்கு என்ன “உருவகம்” (iஅயபந) கொடுக்கப்பட்டிருந்தாலும் (மூடனாக, அறிவாளியாக, திறமைசாலியாக) நாம் யார் என்பதை நாம் அறிவோம். அதனால்தான் அந்த உண்மைக்குப் புறம்பாக சமூகத்தில் நாம் என்ன வேடம் போட்டாலும் அது தவறு என்று மனம் சாட்சியாக நின்று பேசுகிறது. அந்த ‘மனசாட்சி’ப்படி வாழ்ந்தாலே, பக்குவம் நமக்கு வந்துவிட்டது என்றுதான் அர்த்தம்.

இந்த மனசாட்சிப்படி வாழ்வது என்பது அத்தனை எளிதல்ல. ஒரு சில செய்கைகளைப் பார்க்கும்போது ‘எப்படி இப்படிச் செய்யமுடிகிறது? மனசாட்சியே இல்லையா!’ எனக் கேட்கத் தோன்றும். உண்மையில் அக்காரியங்களை நிகழ்த்தும்போது, மனசாட்சியை ஓரங்கட்டி விட்டு, அதைப் புரிந்துகொள்ளாத பாவனையில் செயல்படுகிறோம். செய்த செயலுக்கு நாமே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு, அதையே நியாயமாக்க முயல்கிறோம். மீண்டும் மீண்டும் இத்தகைய போக்குத் தொடரும் போது, அத் தகாத செயல்களே நம்மைப் பொறுத்தவரை நீதியாகி விடுகிறது. தராசு முள் போல் அந்தரங்கத்தில் நம்மை நாமே எடை போட்டு, நமது செயல்களின் தன்மையை மதிப்பிட்டால் ஒழிய உண்மையை உணர முடியாது.

உண்மையை உணர்ந்து, அகம்-புறம் இரண்டிலும் வேற்றுமையின்றி வாழப் பழகிவிட்டோம் எனக் கொள்வோம். அடுத்த படி,‘மனதை யடக்குதல்’. ஞானிகளுக்கே சுலபத்தில் கைவராத ஒன்று. ஆனாலும் இது ஒன்றுதான் இறையுணர்வில் நிலைக்க அத்தியாவசியமானது. ஒரு நேரம் குழந்தை காரணமின்றி அங்கும் இங்கும் அலைவது போல சலனம். மறு நேரம் ஆழ்ந்த அமைதி. ஒரு வேளை எடுத்ததற்கெல்லாம் குழப்பம். மறு வேளை சரியோ, தவறோ தீர்க்கமான முடிவு. எதிலும் விரக்தியுறுவதும், பற்று கொண்டு ஆசிப்பதும் மாறி மாறி ஆட்கொள்கிறது. ஒன்றிலிருந்து ஒன்றாக தாவிக் கொண்டே  மனம், எதற்காக ஏன் இதை நினைத்தது என்று நமக்கே புரியாத வகையில் ஆட்டிப் படைக்கிறது. மனதை ஒருமுகப் படுத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்கிறார்கள். ஆனால் ஒரு ஐந்து நிமிடம் சேர்ந்தாற்போல் மனம் ஒன்றுபட மாட்டேனென்கிறதே!“மனம் அமைதியற்றது. கட்டுக்கடங்காதது என்பதில் ஐயமில்லை. ஆனால் பயிற்சி, பற்றற்ற நிலையால் அதை அடக்கி ஆளலாம்” என்கிறது பகவத் கீதை. ‘அடுத்து முயன்றாலும் ஆகு நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா’ - எவ்வளவுதான் முயன்றாலும் முயற்சி பலனளிக்க நாளாகும். அதுவரை பொறுமையும், விடாமுயற்சியும் தேவை. ஏனெனில் ஒன்றைவிட்டு ஒன்றை ஆசித்து அதைப் பற்றிக்கொண்டு இருப்பதுதான் ‘மனம’;.  ஒரு வேளை இறைவன் நமக்களித்த ‘சோதனை’யே இந்த மனம்தான் போலும்! அதைப் பக்குவப்படுத்தி, அடக்கி வெற்றி கண்டு, அதன் மூலம் ஞானம் பெறுவதுதான் அவன் ‘தேர்வு’ போலும்!                                                                                        
 “மனம்” பற்றிக் கூற இன்னும் எத்தனையோ உள்ளன. ஏனெனில் நம் வாழ்க்கையின் போக்கை நிர்ணயிப்பதே இந்த மனம்தான். இதுதான் ஆசையைத் தூண்டுகிறது-பின் இதுவே அது தவறென்றும் கூறுகிறது. மனம் ஆசைப்படும் ஒன்றை நாம் அடைய விரும்புகிறோம். இதில் தவறிருப்பதாகப் படவில்லை. ஆனால் அந்த விருப்பத்திற்குத் தடை ஏற்படும்போது ‘கோபம்’ உண்டாகிறது. அந்தப் பொருளை நாம் அடைந்துவிட்டால் அதன் மீது பற்று உண்டாகி அதிலேயே மூழ்கிப் போகிறோம். இது ‘லோபம்’. அதாவது அதில் கருமியாகி கஞ்சத்தனம் பிறக்கிறது. இதுவே பாலுணர்வாக இருக்கும்பட்சத்தில் ‘மோகம்’ உண்டாகிறது. மோகம், புகழ், பதவி, செல்வாக்கு இவற்றை விட முடியாமல் ‘மதம்’ பிடிக்கிறது. அதாவது அகங்காரம் பொருந்திய கர்வம் ஏற்படுகிறது. இதற்கு பங்கம் விளையும் போது அதற்குக் காரணமானவர்கள் மீது ‘வஞ்சம்’ பிறக்கிறது. பிறகு அவர்களை அவமதிக்க வேண்டும், அல்லது பழி வாங்க வேண்டும் என்ற ‘குரோதம்’ குடிகொள்கிறது. ஒரு சாதாரண ஆசை எங்கே போய் முடிகிறது! இதனால்தான் ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார் புத்தர். இந்த ஆசையைப் பண்படுத்துதலே “ஞானம்”. ஆனால் உலக வாழ்வின் இன்பங்களில்  ஊறித் திளைத்ததல்லவா மனம்? இந்த இன்பங்கள் நிலையற்றவை, எல்லாமே அழியப் போகின்றவை, எதுவுமே சொந்தமில்லை, எல்லாம் பொய், மாயை என்னும்போது வலிக்கத்தான் செய்யும். பல வருடங்களாக அனுபவிக்கும் ஒன்று திடீரென்று “அர்த்தமற்றது” என்று சொல்லப்படும்போது ஒரு திடுக்கிடல் தோன்றத்தானே செய்யும்? அதனால்தான் இந்த உண்மைகள் காலங்காலமாய் சொல்லப்பட்டு வந்தாலும் செயலுக்கு வருவதில்லை!

“மனதை அடக்க நினைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும்” என்கிறார் வேதாத்திரி மகரிஷி. இயற்கையாக பிறக்கும் உணர்ச்சிகள், அதற்கு இந்தச் சமுதாயம் தரும் இடம், நாம் இருக்கும் சூழ்நிலை, நமது தேவை, நம் பழக்கவழக்கங்கள் இவையெல்லாவற்றையும் சிந்தித்து, ஒரு செயலின் பயன் எது என்று கணித்து, நமது அனுபவம், தற்கால, எதிர்காலத்தில் அச்செயலின் விளைவுகள் எப்படியிருக்கும் என்று காண்கின்ற முழுமையான அறிவே “ஞானம்”.

செயலுக்குக் காரணம் மனம் எனக் கண்டோம். மனம் நல்லியல்பில் இருந்தால் நற்செயல்கள் விளைகின்றன. ஐம்புலன்களால் உணரும் ஒன்றே பெரிதெனக் கொண்டு செயல்பட்டால் தீமை ஏற்பட ஏதுவாகிறது. இப்படிப்பட்ட உணர்ச்சிமயமான வாழ்வு, மனம் மாயையில் மூழ்க இடமளிக்கிறது. எனவே இந்த அறியாமை அல்லது அஞ்ஞானம் எனும் மனநோய் தீர்ந்து, அறிவு வழி ஞானம் பெற முயல வேண்டும். அதாவது அறிவால் நல்லதை உணர்ந்து அதில் நிலைக்க வேண்டும். முக்கியமாக “நான் செய்கிறேன்” என்கிற நினைவு ஓழிய வேண்டும். இந்த நினைவு நம்மை எப்போதும் அலைக்கழித்து நிம்மதியிழக்கச் செய்கிறது. ஏதோ எல்லாவற்றையும் தானே சுமப்பது போன்ற களைப்பையும், நல்லபடியாகச் செய்யவேண்டுமேயென்ற கவலையையும், இடர் நேர்ந்தால் ஏமாற்றத்தையும்,  செயலாற்றாக் கழிவிரக்கத்தையும், உதவ ஆளில்லா ஏக்கத்தையும், பிறர் மீது சொல்லத்தெரியா எரிச்சலையும் உண்டாக்குகிறது. “என் கடமை எதுவோ அதைச் செய்கிறேன்;, பலன் கிடைக்கிறதோ, இல்லையோ அது என் பொறுப்பில்லை” என்று நினைத்துப் பாருங்கள். உடனே மனம் இலேசாவதை உணர்வீர்கள்.

குடும்ப உறவுகள் பெரும்பாலும்  ‘நாம்’ எனும் உணர்வை ஊட்டும் களமாக இருந்தாலும், இதிலும் ‘என் குடும்பம்’, ‘என் மக்கள்’ என்ற வலைக்குள் பலர் சிக்கிக் கொள்கிறோம். அண்ணன்-தம்பியாக இருந்தாலும் வேற்றுமைக் கணக்குப் பார்க்கிறோம். இச்சிறு எல்லையையே கடக்க முடியாதவர்கள், எங்ஙனம் “யாதும் ஊரே யாவரும் கேளிர் (உறவினர்)” என்னும் நிலையடைவது! ஒருவகையில் ‘நாம்’ என்னும் நினைவே பின்னர் ‘பொதுநலம்’ ஆகிறது. அது சமூக அளவில் வளர்ந்து, உலக அளவில் விரிந்து, பின் எல்லாவற்றையும் கடந்த ஒன்றில், பிரபஞ்ச அளவில் இலயித்து, இறுதியில் ‘அந்த நினைவும்’ அழிந்து போகிறது. ஏனெனில் ‘தன்’ மயமாக எண்ணிய ஒன்றை பிரபஞ்ச அளவில் எண்ணக் கற்றுக் கொண்ட பின் அங்கே ‘தான்’ என்கிற தனிமை ஏது? “தழல் வீரத்திற் குஞ்சென்று, மூப்பென்று முண்டோ?” என்கிறார் பாரதி.; அகல் விளக்கில் சிறு ஒளி பாய்ச்சி நிற்பதும் தீ தான். அதையே  வானுயர எழும்பும் தீச்சுவாலையில் எரிந்து விட்டால் பின்னர் அதனைத் தனியே இனம் காண முடியுமா?

“நான்” என்பது உள்ளவரை, “எனது” என்ற எல்லை உண்டு. அது ஒரு குறுகிய வட்டமாகத்தான் இருக்கும். அதைத் தாண்டிவிட்டால் எல்லையில்லா சுதந்திரம்தான். அச்சிறு வட்டம் ஒரு தடையாகி இறைவனின் பேரருளைப் புரிந்துகொள்ள இயலுவதில்லை. இரவில் விளக்கொளியில் ஓரளவு சுற்றியிருப்பதைக் காண்கிறோம். பகலில் சூரிய வெளிச்சத்தில் கண்ணுக்கெட்டிய வரை சுற்றுவட்டாரத்தைப் பார்க்கிறோம். நடுவே ஒரு சுவர் இருந்தாலோ ஒளி இருந்தும் எதுவும் தெரிவதில்லை. மாறாக உயரத்திற்குச் சென்று, பகலவன் ஒளியில் எல்லாமே தெரியக் காண்கிறோம். அது போலத்தான் நம் மனம் விரிய விரிய,  நமது அனுபவம் புதுமையானதாக இருக்கிறது. இதுவரை நாம் நடந்துவந்த பாதை மாறி, கோவிலில் ‘கடவுள்’ என்பதற்கான அறிகுறியாக காட்டப்பட்ட ஒன்றை ‘அனுபவப் பொருள்’ ஆகக் காண்கிறோம். அப்போது எண்ணிலா இரகசியங்கள் வெட்டவெளியாகின்றன. பைபிள் இதை, “இப்போது கண்ணாடியில் பார்ப்பதைப் போல மங்கலாகக் காண்பதை நேரில் காண்போம்” என்கிறது.

இந்த நிலைக்கு மாற இறைவனைப் பற்றுவதுதான் ஒரே வழி. குழந்தை எப்படி தன் தாயின் அருகாமையில் பாதுகாப்பையும், தன்னைப் பற்றிய கவலையற்ற மனதையும் பெறுகிறதோ அதுபோல இறைவன் துணை நிற்கிறான் என்கிற எண்ணம் நம் மனதை இலகுவாக்குகிறது. கவலைகளிலிருந்தோ அல்லது பொறுப்பிலிருந்தோ தப்பிக்கும் வழியென்று இதை நினைக்க வேண்டாம். “கடமை” என்று வரும்போது அதிலிருந்து நழுவும் உத்தியல்ல கடவுள் நம்பிக்கை. மாறாக அது உள்ளத்தால் அவனோடு ஒன்றும் இலயிப்பு. தரையில் நடக்கும்போது கல், முள் பார்த்து நடக்க வேண்டும். அதே இடத்தில் ஆறு ஓடிக் கொண்டிருந்தால், படகில் எந்தக் கவலையும் இன்றிப் போகலாம். இறை உணர்வில் மிதக்கும்போது இப்படித்தான் புலன்களால் உண்டாகும் கவலை, துன்பம் மறைந்து போகிறது. ஒன்று உள்ளம் ‘தன்னை’ அழித்து விடுகிறது அல்லது உள்ளமே கரைந்து விடுகிறது.

அறியாமை நீங்கி, பால பருவத்தைத் தாண்டி மனம் முதிர்ந்து, உலக வாழ்வை எதிர் நோக்க தயாராவது போல முன்னைய இருள் நிலை மறந்து மனம் ஒளி பெற ஆரம்பிக்கிறது. இப்போது நாம் செய்த பல காரியங்கள் முக்கியத்துவம் இழந்து மறந்து போகும் அல்லது வெட்கத்திற்கோ அன்றி நகைப்புக்கோ இடமாகும். “செயல் மாண்டு, அடங்கப், புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித் தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தே” என்கிறார் அருணகிரியார். சில வேளைகளில் இந்த இறை ஆனந்த ஊற்றுப் பிறந்து, ஆறாக ஓடும் போது கூட மேடு பள்ளமென்ற வேறுபாடு தெரியலாம். ஏனெனில் ‘செயல் மாள்வது’ என்பது அத்தனை எளிதானதல்ல. உணர்ச்சிகளுக்கும், உலக நடப்புகளுக்கும் அடிமையாகிப் போன மனம் அதிலிருந்து விடுபட்டு ‘செயலிழப்பது’ சாதாரணமானதல்ல. அதற்கான பக்குவம் எளிதில் கைக்கூடுவதில்லை. ஆனால் அதற்கான முயற்சி என்றும் தோற்பதில்லை. ஒரு முறை அந்தக் ‘கடல்’ உள்ளத்துள் புகுந்தால் போதும், பிறகு எந்த பேதமும் தெரிவதில்லை. தாமரை இலைத் தண்ணீராக மனம் எதிலும் ஒட்டாது தனித்து நிற்கும்!

பொருள், பதவி, புகழ் இல்லையே என ஏங்குகிறோம். அவற்றை இழந்தால், நோயுற்றால், இறப்பு நேர்ந்தால்,   அதற்காக வருந்துகிறோம். ஆனால் மனிதப் பிறவியின் இலட்சியம் என நம்பும் இறைவனை அடையவில்லையே, அந்தப் பேறை இழந்திருக்கிறோமே என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லை. உலக ஆசையெனும் நிழல் கவிந்திருக்கும் வரை இதயக்கமலம் மலர வழியில்லை. இறையன்பு என்ற அருள் ஒளி அதற்குத் தேவை. நாம் அதற்காகச் செய்ய வேண்டியது எல்லாம் கோயில் உருவை உள்ளத்திலிட்டு, உணர்ந்து, அன்பெனும் நீர் பாய்ச்சுவதுதான். அதிலேயே திளைத்திருக்க வேண்டுமென்ற வைராக்கியம்  உரமாக, நாளடைவில் ஞானம் வளரும். ஞானம் வையக ஆசையை நைந்து போக வைக்கும். ஐம்பொறி வாயிலாகக் கிடைக்கும் சிற்றின்பத்தில் தானே கவர்ச்சி குறையும்.  வாழ்க்கை இன்பங்களை, கற்ற அறிவை, பெற்ற அனுபவங்களை வைத்தே பேரருளைப் பெற முயல வேண்டும். அந்த முயற்சியின் முடிவே இறைவனடி.

“நீயான ஞான விநோதந்தனை என்று நீ அருள்வாய்?” என்று அருணகிரியார் கேட்பதுபோல, நாமும் அதற்கான வினாடிக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும். சேற்றில் விழுந்தவனைக் கரையேற்ற, கரையில் இருப்பவன் உதவுவதுபோல இந்த உலக மாயைச் சகதியில் உழன்றுகொண்டிருக்கும் நமக்கு ஆண்டவனும் கை கொடுக்கிறான். தாய் குழந்தையின் முயற்சியைப் பாராட்டி அது வெற்றி பெறத் தன்னால் ஆன உதவியைச் செய்வதைப் போல இறைவனும் நம் ஆவலுக்கு, அவனை அறிய விழையும் தேடலுக்கான ஞானத்தை வழங்குகிறான். இதையே பைபிள் ‘விழிப்பாயிருங்கள். மணமகன் எப்போது வருவார் என்று யாருக்கும் தெரியாது’ என்கிறது.

இங்கு, மரணத்திற்குப் பின்தானே ஆன்மா இறைவனோடு கலத்தல் அல்லது இறைவனை அடைதல் சாத்தியம்? ஞானம் பெற்று, கடவுள் நம்பிக்கை உறுதிப் பட்டாலும், இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது அதற்கேற்ப நடப்பதும், இன்ப துன்பங்களை அனுபவிப்பதும் தவிர்க்க முடியாததல்லவா என்ற கேள்வி எழுவது இயல்பானதே! சாதாரணமாக இறந்தவர்களைக் குறிக்கும்போது ‘ஆன்மா இளைப்பாறுகிறது’ என்ற அர்த்தத்தில் குறிப்பிடுவது உண்டு. ‘ஆன்ம சாந்தி’ என்ற சொற்றொடர் எல்லா மதத்தினராலும் உபயோகிக்கப் படுகிறது. இதன் பொருள் என்ன? அந்த ஆத்மா ஆசைகளால் அலைக்கழிக்கப் படாமல், செயல் அற்று உள்ளது என்பதுதானே! பொதுவாக ‘இறத்தல்’ என்பதற்கு ‘கடத்தல்’ என்றொரு விளக்கம் உண்டு. ஒரு நிலையைக் கடந்து மற்றொரு நிலைக்குப் போவது என்பதை இது குறிக்கிறது. அப்படியானால் அன்றாட அனுபவங்களால் பாதிக்கப்படாமல், தெய்வ சிந்தனை கொண்டு, எல்லாவற்றையும் ‘அவன் செயல்’ என்று பார்க்கும் ஞானம் பெற்று விட்டால், நாமும் புற உலகைப் பொறுத்த மட்டில் அதைக் ‘கடந்து’ அதாவது ‘இறந்து’ விட்டோம் என்றாகிறதல்லவா?

ஒரு செயலைச் செய்கிற உணர்வு, அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கும் தன்மை மறைந்து விட்டால், அதாவது ‘வினை’ என்ற ஒன்றில்லையேல் அதனால் ஏற்படும் பாவ, புண்ணியங்களும் இல்லாதொழிகின்றன. பாவம் அழிவது நல்லதே, ஆனால் புண்ணியம் சேராவிட்டால் எப்படி என்று தோன்றக் கூடும். நன்றாக யோசித்துப் பார்த்தால், நம்மால் செய்ய முடியும் என்றுள்ள காரியங்களுக்கு மட்டுமே நாம் “நான் செய்தேன்” என்று உரிமையும், பெருமையும் பேசுகிறோம். நமது எல்லைக்கப்பால் நடக்கின்றவற்றுக்கு, எதிர்பாராத நடப்புகளுக்கு, ஏன் நாம் நினைப்பதற்கும், விரும்புவதற்கும் மாறான செயல்களுக்கு “கடவுள் சித்தம்-அவர் இப்படிச் செய்ய முடிவெடுத்து விட்டால் யாரால் தடுக்க முடியும்?” என்கிறோம். நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால் உள்ளது மட்டுமல்ல, நாம் செய்யும் எல்லாக் காரியங்களுக்குமே அவர்தான் காரணம் என்கிற ஞானம் வந்து விட்டால், பிறகு அதில் நமக்கென்று என்ன சொந்தம் இருக்க முடியும்?  வழக்கமாக, ‘கடவுள் பார்த்துக்கொள்வார்’ என்று படிக்காமல் பரிட்சைக்குப் போனால் முடிவு என்னவாகும் என்று பலர் கேட்பார்கள். வெற்றிப் பெற வைக்க வேண்டுமென கடவுள் நினைத்தால், படிக்காமல் சென்றால் கூட ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததை நினைவு கூர்ந்து எழுதி தேர்வடையலாம். அப்போது நாம் ‘அதிர்ஷ்டவசமாக’, படிக்க முடியாமல் போனாலும், சிந்தித்து பதிலெழுதி தேர்வடைந்து விட்டேன் என்று நம் அறிவின் மீது பெருமிதம் கொள்வோம். மாறாக, சில வேளைகளில் கடைசி நிமிடம் வரை படித்து விட்டுப் போனாலும், அந்த வினாடியில் அவை மறந்து போகும். அல்லது எதிர்பாரா ஏதோ ஒரு தடையினால் வெற்றி கைநழுவிப் போகும். அதுதான் ‘விதி’க்கப்பட்ட கடவுள் செயல்.

இந்த ஞானம் பெற்று, ‘தான்’ எனும் நினைவை ஒழித்தவர்களும்;, எல்லோரையும் போல்தான் கடமை புரிவார்கள். வெளித் தோற்றத்தில் பிறரை ஒத்து செயல் புரிந்தாலும், அவர்களுக்கு அதில் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை! உடலோடு வாழ்ந்தாலும் ஆன்மா தனித்தியங்கும் நிலை இது. எந்தச் செயலிலும் ஒட்டாததால், ஐம்பூதங்களாகிய இவ்வுலகை விட்டு விலகி, அதை உரைக்கும் உணர்வும் அற்று, தனி வீட்டில் தனித்து இருப்பது போன்றது. அதாவது புறத்தே வணங்கிய இறையை, அகத்தே உணர்ந்து, தெளிந்து, அடங்கிய நிலை. இதுவும் ஒரு வகை “சமாதியே!” இது அமைதி தரும், சுகம் தரும். இதைத்தான் “சும்மா இருத்தலே சுகம்” என்று ஆன்மிகவாதிகள் கூறுகிறார்களே தவிர, வேலையில்லாமல் சோம்பித்திரிவதை அல்ல.

நாளடைவில், இறைவனோடு ஒன்ற வேண்டுமென்ற தாகமும், ஒன்றி விட்ட இன்பானுபவமும் அடைந்த இவர்கள் விழித்திருந்தாலும் மனம் வேலை செய்யாது, உறங்குபவர் போலிருப்பர். ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி’,  இவர்கள் இறைஒளியில் உலவுவதால் நிறைவுடன் வாழ்கிறார்கள். இறைத்திருவருள் கொண்டு, சரீரம் இருந்தாலும் மோட்ச இன்பம் பெறும் இந்நிலையே “ஜீவன் முக்தி”. ஒருமைப்பட்ட மனக்கண்ணின்; மூலம் வழிபட்ட தெய்வத்தின் திருவுருவைத் தெளிவாகத் தரிசிக்கும் பேறு பெற்ற இவர்கள், இறைக்குரலையும் கேட்பார்கள்.இறுதியில் அதையும் கடந்த ஒளிமயமான சோதியைக் காண்பார்கள். அங்கே அவர்களது இதய ஆராதனை ஆன்ம சமர்ப்பணமாக பூச்சொரியும். ஒரு வேளை மரணம் அந்தச் சோதியை அவர்களிலோ அல்லது அவர்களை அந்தச் சோதியிலோ நிரப்பும். உயிருள்ளபோதே “பேரின்ப வீட்டினை” உணர்ந்துவிட்ட அவர்கள், பின்னர் அந்த ‘வீட்டிலேயே’ குடிகொள்வார்கள்! (வள்ளலார் ‘அருட்பெருஞ் சோதி’யில் கலந்து மறைந்து போனார் என்பார்கள். பிரெஞ்சு தத்துவ  எழுத்தாளர் பிளேஸ் பஸ்கால் இறந்த பின் அவர் சட்டைப் பையில் கண்டெடுத்தக் கடிதத்தில் ‘நான் ஒளியைக் கண்டு விட்டேன்’ என்று எழுதியிருந்தாராம்)

இங்கு இவர்கள் நிலை பற்றி இன்னொரு முக்கியமான செய்தியைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். உள்ளத்தால் இறைத்தன்மை பெற்றுவிட்ட இவர்கள் காலத்தையும், இடத்தையும் கூட வென்றுவிட்டவர் ஆவர். உதாரணத்திற்கு நாம் நமக்குப் பிடித்த கடந்த கால நினைவுகளில் மூழ்குவதாக வைத்துக் கொள்வோம். அதில் ஆழ்ந்த பின், சூழ்நிலையை மறந்து இன்பமோ, துன்பமோ அந்த நொடியில் அதே உணர்வுகளை மீண்டும் பெற்று, கண்ணீரோ அன்றி உவகையோ கொள்கிறோம். உள்ளார்ந்த மன நெகிழ்வுக்கு காலமும், இடமும் ஒரு தடையல்ல என்பது நிரூபணமாகிறது. மேலும் காலம் என்பது மனிதனால் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்று பிரிக்காமல் 12 மணியென்றோ, அன்றி 48 மணியென்றோ பிரித்தால் எல்லாக் கணக்குகளுமே மாறிவிடும். எனவே மனதால் தன்னுள் உறையும் இறையை தரிசித்தோர், எல்லாவற்றையும் கடந்து இறையை உணர்வதும் சாத்தியமாகிறது.



இதுவரை நாம் எப்படி வாழ்ந்திருந்த போதிலும், இனியேனும் பலர் சென்று வழிகாட்டிய அந்த ‘பேரின்ப வீட்டுக்கு’ச் செல்லும் திசையில் செல்ல முயல்வோம். மலை உச்சிக்குச் செல்ல அடிவாரத்திலிருந்து பல பாதைகள் இருக்கலாம். இதிலும் ‘என் பாதைதான் சிறந்தது’ என்ற குறுகிய நோக்கு வேண்டாம். மத வெறிக்கு இந்த எண்ணம்தான் அடிப்படை. அவரவர் வழியில் அவரவர் செல்லட்டும். முடிவு ஒன்று தான். அப்படியே தன் பக்தி மார்க்கத்தில் பற்றும், அதன் சிறப்பை மற்றவர்கள் உணரவில்லையே என்ற ஆதங்கமும், ‘தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்கிற முறையில் எல்லோருக்கும் அதை அறிவிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தால் - அதை ‘நமது நடத்தைத் தெரிவிக்கட்டும்’. குன்றின் மேல் வைத்த விளக்காக, இறை ஒளி நம் மூலம் பரவி எல்லோரையும் ஈர்க்கட்டும். வழி காட்டட்டும்!

குறிக்கோளை விடாது, அடுத்துள்ளவர் போல் நாமும் வாழ வேண்டும் என்று சொத்தும், புகழும் சேர்க்க விரும்புவது போல, இறைவனின் அருளைச் சேர்க்க ஆவலும், ஆர்வமும் கொள்வோம். ‘வாழ்க்கை எப்போதும் இரண்டாவது சந்தர்ப்பத்தை அளிக்கிறது-அதன் பெயர் நாளை’ என்பார்கள். அந்த ‘நாளை’ நமக்கு இறைவனில் தன்னை மறக்கும் நாளாகட்டும். பாலில் கலந்து விட்ட நீராக, பிரித்துணர இயலாத பிணைப்பாக இறை-மனித உறவைக் காண்போம். ஏனெனில் இதில் கூட ‘இறைவனின் சன்னிதானத்தில் நாம்’ என்றும், ‘இறைவனோடு இரண்டறக் கலப்பது’ என்றும் இரண்டு வகை நம்பிக்கை உண்டு;. இங்கே பாலோடு சேர்ந்துவிட்ட நீர் தனித்துத் தெரிவதில்லை என்கிற “அத்வைதம்” (கடவுளில் கலந்து “நாம்” மறைந்து போவது), தனித்துத் தெரியாவிடினும் பால்-நீர் என்ற இரண்டுமே உள்ளது என்கிற “துவைதம்” இரண்டும் கூட உண்மையில் ஒன்றைக் குறிப்பதாகவே ஆகிறது.
                                                                                 
                                                                                  

Sunday 11 December 2011

கவிதைக் கதம்பம்

மார்கழி

கொட்டும் பனியில் குளிர்நடுக்கும்
கட்டுக் கடங்கா புகைமறைக்கும்
ஓட்டும் உடையில் உடல்சிலிர்க்கும்
ஒன்றும் உள்ளம் இணைசேர்க்கும்
தொட்டுத் தழுவும் மனம்களிக்கும்
தொடரும் இன்பம் இதழ்வார்க்கும்
விட்டக் குறையை நிறைவாக்கும்
விளையும் புதுமை வரவாக்கும்!


கனியும் பார்வை தேன்பொழிய
கைகளின் அணைப்பில் பூவிதழ்தன்
இனிய இதமே ஊனுருக்க
இன்பங் கோடி சேர்த்திங்கே
புனிதம் நிறையும் புன்னகையில்
பொதியும் உள்ளம் பொங்கிவர
தனிமை நீக்கும் உறவதுவாம்
தாயின் மடியோர் மார்கழியே!



வள்ளலார் காட்டும் வழி

அவலம் புலம்பஇ அறிவரும் பெருமை!
எவரும் புகழும் எளிமையின் இனிமை!
நெஞ்சறி வுறுத்தல் நிதமும் நிகழ்த்தல்
வஞ்சம் இலாத வடிவில் நிலைத்தல்
தரிசன வேட்கை தன்னில் ஆழ்தல்
விரியும் மனதில் வறியோர் நினைத்தல்
திருவடி புகழ்ச்சி தினமும் படைத்தல்
இருமை இரண்டின் இன்னல் களைதல்
அவாவ றுத்தல் அவனியைத் துறக்க
சிவாய மதிலே சிந்தையைச் சேர்க்க
இன்ப துன்பமும் இச்சக மாயையும்
ஆன்ம தரிசனம் அகத்தில் அழிக்கும்
கூடல் விழைந்தே கொடுக்கும் இலயத்தில்
தேடல் நின்றே தேனாய்ப் பெருகும்
திருவருள் விழைதல் துன்பந் தீர்க்க
அருட்பெருஞ் சோதியும் ஆட்கொள வருமே
கள்ளம் ஒழித்த காருண் யமதுவே
வள்ளல் பெருமான் காட்டிய வழியே!


கவிஞர் கி. பாரதிதாசனும் நானும்


கி. பாரதிதாசன் கவிதை :

சொல்வேந்தர் என்னும் சுடர்பட்டம் பெற்றொளிரப்
பல்வேந்தர் பாடிப் பறந்திடுவார்! - நல்லறிவைக்
கொள்வேந்தன்! அஞ்சா..மல்வேந்தன்! தமிழ்ப்பகையைக்
கொல்வேந்தன் என்றனுக்கேன் கூறு!

பதில் கவிதை :

பட்டங்கள் தான்விழைந்தேப் பாடிவரும் தாய்த்தமிழின்
விட்டத்தைத் தேடியிங்கு வெற்றிமாலைத் - தொட்டவரை!
சட்டமென எதுமில்லைச் சாற்றிடவே! நாள்தோறும்
பட்டயத்தில் நல்லறிவைப் போற்று!

பதிலுக்குப் பதில்:

பட்டம் பதவி பரிசுகளை நோக்கிநான்
திட்டம் இடுவதில்லை! சேர்வதில்லை - கொட்டமிட!
சட்டம் எனக்குண்டு! தன்னலம் எண்ணுகின்ற
மட்டம் இலாத மனம்!

பதிலுக்குப் பதிலுக்குப் பதில்:

மட்டம் இலாத மனமொன்றைத் தேடியே
திட்டம் வகுத்தேனும் திக்கெங்கும் - வட்டமிடும்!
கட்டுக் கடங்காத கற்பனைகள் உம்வழியே
எட்டும் கவிதைப் படைப்பு!

தொடர் கவிதை:

என்றன் கவிதைகள் ஏந்தி அணிந்திடும்
உன்றன் கவிதையை ஒண்மணியாய்க் - குன்றெனை
ஓங்கும் பெருமலையாய் ஓதும் உயர்வெண்ணித்
தாங்கும் தமிழைத் தரித்து!

தொடர் பதில் கவிதை:

வண்ண மலரின் மணமதை யேற்குமே
பின்னிய நாரும் பெருமிதம் - தன்னிலே!
உன்றன் கவியினுக் கொண்மணியாய் ஏந்திய
என்றன் கவிதையும் இனித்து!-(ராசி)

ஈற்றில் ஒருதலை ஏனோ தடையிடும் !
மாற்றிப் படைத்தால் மண்பெறும்-காற்றில்
பறக்கும் பறவையெனப் பாக்கள் பயணம் !
சிறக்கும் இனிமை செழித்து ! (பாரதி)

ஆர்வ அவசரம்இ ஆழ்ந்த கவனமிலா
பூர்த்தி செயலிலேப் பூசிடும் - குற்றமே !
ஆசிரியப் பண்பும் அதனையே மாற்றியிங்கு
வீசிடும் பாக்களின் மீது ! (ராசி)

சொல்லினிமை ! ஆற்றும் செயலினிமை ! தொண்டுளம்
நல்லினிமை ! நல்கும் மொழிநடை - மெல்லினிமை !
வல்லினிமை வண்டமிழில் வார்க்கும் கவிதைகள்
பல்லினிமை பாய்ச்சும் பணிந்து ! (பாரதி)

சொல்லினிமைக் கண்டுமே சொல்லவந்தப் பாராட்டைக்
கள்ளினிமை நான்பெறவே காட்டிவிட்டீர் - வல்லினிமை !
செந்தமிழின் நல்லினிமை சீர்மிகுந்தப் பாக்களிலே
விந்தை ! மயங்கும் மனம் ! (ராசி)


மாறும் மனமே!

தேவாதி தேவன் தீட்டும் திட்டம்
மேவும் பனியாய் மூடியே நிற்கும்!
மானிட வாழ்வு மாயை தனிலே
வீணிலே மயங்கி விழிப்பை மறக்கும்!
இன்பம் துன்பம் என்றே நாளும்
மன்பதை இடையே மாட்சி இழக்கும்!
தூக்கம் கலைத்திடத் தூயவன் துணிந்தால்
வாக்கும் நல்க, வாய்மையுஞ் சேரும்!
உலகப் பற்றினை உவந்தே தள்ளி
இலவம் பஞ்சென இகத்தை மாற்றி
வெற்றிடந் தன்னில் வேற்றுருக் காட்டி
சுற்றியே நின்று சொந்தம் தந்து
வீழும் போதில் விரைந்து தாங்கி
வாழும் நாளை மெய்த்தவம் ஆக்கி
தன்னை இழந்தே தகவை நோக்கி
மண்ணில் இருந்தே விண்ணை அடையும்
அருளும் பொழிந்து அறத்தில் நிலைக்கும்
கருப்பொருள் அறியும் கருணையும் ஈயும்!
தேறும் நினைவும் தேர்ந்த நிலையும்
மாறும் மனமும் மாதவன் கொடையே!


அரிய புத்திரன்:

அரியதொரு புத்திரனாம் ஆரணங்கே! சொல்லால்
விரித்தியம்ப வொண்ணுமோ வித்தகனை? வெல்லும்
கவிபடைத்துத் தாய்த்தமிழின் காவலனாய், வல்ல
புவிசிறக்கும் கற்றவனைப் போற்று!


சிவப் பிரகாசம்:

சிரிக்கின்ற கண்களிலே செம்மலர்போல் உவகையினால்
சிவப்பு மின்னும்!
உரிமையினால் குரலொன்று ஓங்கிவந்து செவியடைந்து
உறவைச் சொல்லும்!
பிரிவறியா உணர்வொன்று பாசமிகு பந்தத்தில்
பிணைந்து நிற்கும்!
வரிவரியாய் கண்ணதாசன் விதைத்துவிட்ட கோலங்கள்
வித்தை காட்டும்!

தலைக்குமேலே பணிவன்பு தூக்கிவிட்ட கரங்களிலே
தொன்மை பின்னும்!
கலைவிழாக்கள் பலவுண்டு காண்போரைக் கவர்ந்திடவே
காலம் காணும்!
சிலையெனவே தொடர்மனையாள் சொந்தத்தில் புன்னகையும்
சிந்தை சேரும்!
விலையிலாத நட்பதனின் வெளியுருவாய் உலவிவரும்
விந்தை பாரும்!

இத்தனையும் ஒருசேர இணைந்துவிட்ட ஓருருவே
இன்று இங்கே!
சத்தான வாழ்வொன்றைச் சாதனையாய் நடத்திவிட்டு
சான்று காட்டும்!
முத்தாகச் சுற்றிவரும் முக்கனியாம் செல்வங்கள்
முனைந்து தாங்க,
இத்தரையில் சிவப்பிரகாசம் இன்றுபோல சுடர்விட்டு
என்றும் வாழ்க!


அழியும் பூஞ்சோலை

மண்ணில் உதிக்கும் வண்ண மலராய்
கண்ணைக் கவரும் கவினுறு மழலை!
இறைவன் படைப்பில் இன்னிசைத் தென்றல்
மறையும் புன்னகை மாறா எழிலில்
குவளைக் கண்கள் குளுமைச் சாரல்
இவளின் தொடுகை இன்ப ஊறல்
குவிந்த இதழும் கொழித்த கன்னமும்
புவியில் எங்கும் பூக்கா அதிசயம்!
நெற்றிச் சுருக்கம் நெஞ்சில் வார்க்கும்
ஒற்றி எடுக்க வொட்டா கலக்கம்
ஏழு பிறவியும் எளிதாய் மாற்றும்
பூங்கொத் ததுபோல் பொலியும் கோலம்
ஈங்கவள் அணைக்க இன்பம் பெருகும்!
உடலின் வேட்கை உள்ளக் காமம்
கடலினும் பெருகிக் காற்றாய் அலைந்து
இணைவது ஒன்றே இங்குளத் தவமென
முனைவோர் மனமே முற்றும் கல்லாய்
உறவின் பயனாய் உருக்கொளும் உயிரை
பிறவித் துன்பம் பெருஞ்சுமை என்றே
தடுத்து நாளும் தானெனும் மமதை
அடுத்தே வளர்ந்து அழிக்கும் மலரை!
வண்ண மலரும் வாடி உதிர,
மண்ணில் சோலை இல்லா தொழியுமே!


உலகம் உன் கையில்

உலகம் உங்கள் கைகளிலே
உண்மை ஆயின் அதனழகு,
நிலவும் வன்மம், கொலைவெறியில்
ஞால மழிக்கும் மாசுதனில்
இலவம் பஞ்சாய்ப் பறந்திடாது
இன்பக் கோள இயற்கைதனை
உலவும் உயிராய்ப் பேணியிங்கே
உள்ள வரையில் காத்திடுவீர்!


உழைக்கும் இனம்

ஆதி மனித காலமுதல்
அவனி காகக்கும் ஓரினமே!
சாதி சமய வேற்றுமைகள்
சற்றும் பாரா ஓரினமே!
மோதி வரும் சங்கடங்கள்
முற்றும் களையும் ஓரினமே!
வீதி தோறும் அவருழைப்பே
விரிந்து நிற்கும் பாரினிலே!

வாழ்வின் மகுடம்



நீ உடல், உறவு இழந்து சென்றாய்
நான் உணர்வு, பந்தம் துறந்து வந்தேன்!
ஓர் பார்வையில், நினைவின் ஆழ்ந்த புரிதலில்
வாழ்ந்த நொடிகளின் பரிமாற்றம்!
இணைந்தது இறைவனின் மகத்துவம்
பூரணமானது வெறுமை! (7-5-2012)


ழான் லுய் - பிரசாந்தா
திருமண வாழ்த்து

இறையருள் விழைந்தே இணைத்த வாழ்வில்
மறைபொருள் யாவும் மனத்தே நிலைக்க,
இணையிலா பூவுல கின்பம் நுகர்ந்து
மனையறம் சிறக்க மாதவம் செய்தீர்!
பிரசாந் தாவெனும் பூங்கொடி படர
உறவென ழான்லுய் உறுதுணை நல்க,
கவினுறு சோலையின் கமழும் பூக்களாய்
புவிதனில் பெறுக பேரும் புகழும்!
சீரும் வளரும் செல்வமும் சூழ
ஊறும் உறவின் உவகையும் பெருக,
வற்றா நதியென வாகை சூடியே
இற்றை நாள்முதல் இனிதே வாழ்கவே!

கடல்

ஆழ்கடல் அமைதி கொள்ளும்
அழகதன் வடிவாய் மின்னும்
சூழ்உல காளும், உள்ளச்
சுடரதன் ஒளியே அள்ளும்!
தாழ்வெனும் போதில் தாங்கித்
தவழ்ந்திடும் அலையாய்த் தேற்றும்
வாழ்வதன் பொருளைக் கற்க
வாய்த்திடும் நிதியும் பெண்ணே!

உப்பெனக் கரைந்து, காதல்
உவகையில் கலப்பாள் தேனாய்
தப்பெனக் கண்டால் சீறிச்
சடுதியில் எழுவாள் பொங்கி!
இப்புவி தனிலே தாயே
இன்னமு தருளும் தெய்வம்
ஒப்பிட அவள்போல் நேரில்
உண்டெனில், கடலே அன்றோ!



மனிதம் மலரட்டும்
கருவறை தன்னின் கதவைச் சாத்தி
இருவர் தன்னலம் இன்பங் காணும்
மீறி வருமோர் மழலையின் வாழ்வு
மாறிப் போகும் மண்ணுக் குள்ளே!
குழலும் யாழும் கூட்டா ஒலியோ
விழலாய் வீணே விம்மி அடங்கும்
மனிதம் எங்கே மாண்பும் எங்கே
புனிதம் மறைந்தே போனதும் இங்கே!
சேர்த்த வங்கிச் செல்வம் நல்கி
பேர்தனை யறியாப் பெற்றவன் பிள்ளை
இன்னோர் தாயின் இடையில் தவழ
நன்னெறி இதுவோ நாளும் விந்தை!
ஒருவனுக் கென்று ஒருத்தி என்றே
உருகும் பாங்கில் ஊனம் இல்லை
நாற்றாய் பண்பை நடுக இன்றே
மாற்றுக உலகை மனிதம் மலரவே!




தணிகா சமரசம்

பொறுப்பாளர், கம்பன் பொருளாளர், காதல்
விருப்பாளர், நற்கவிதை வார்ப்பின் - உருவாளர்,
இல்வாழ்வின் காப்பாளர், இன்முக நட்பாளர்
பல்லாண்டு வாழ்க இனிது!

சிவஹரி

காற்றாடி ஆங்கே கருத்தொத்தக் காதலையே
ஆற்றாமை நீங்க அளித்திடவே, - சாற்றுகின்ற
பாங்கதனை நாதனும் பாய்விரித்தே சொல்லவந்த
ஓங்குமுயர் தொன்மை உறவு!

பல்லாண்டு வாழ்ந்திங்கு பல்சுவையும் கண்டிடவே
இல்ஆள்க என்றும் இனிது!

(விளம்-மா-தேமா)

நாளெலாம் சிரிப்பின் வண்ணம்
நாற்புறம் சிந்தும் வண்ணம்
தாளெலாம் பரமன் சின்னம்
தேடியே செல்லும் திண்ணம்
கோளெலாம் உண்டோ மின்னும்
கோமதி தருமோர் இன்பம்
தோளெலாம் உவகை துள்ளும்
தோழமை இருவர் உள்ளும்!

நற்றுணை கண்ட உள்ளம்
நாளுமே பெருமை கொள்ளும்
ஒற்றுமை உறவில் மிஞ்சும்
ஓங்கிடும் வலிமை தஞ்சம்
பொற்றமிழ் கவிதை நெஞ்சம்
நாடிடும் காதல் கொஞ்சும்
கற்றவர் பெறுக சீரே,
காலமே தருக பேறே!


அசோகன் வாழ்த்து
(மா-மா-காய்)

அமைதி சிந்தும் அழகுண்டு
அன்பில் பிறந்த உறவுண்டு
சமைந்த பண்பின் தெளிவுண்டு
சான்றாய் விளங்கும் குணமுண்டு
அமைந்த அறத்தின் வடிவுண்டு
அருகே இன்பத் துணையுண்டு
குமைந்த மனதில் கனிவுண்டு
குமரன் அருளும் நிலையுண்டு!

ஆழ்ந்த கல்வி அறிவுண்டு
அருமைச் சுற்றம் பலவுண்டு
சூழ்ந்த நண்பர் வலியுண்டு
சுகமே தருமோர் பலமுண்டு
தாழ்ந்தோர் துன்பம் நீக்குமொரு
தழைந்த குணமும் கிளர்ந்தோங்க
வாழ்ந்த நாளின் வளம்பெருகி
வளர்க, வாழ்க பல்லாண்டு!


நாற்காலி?!
(அகவல்)

நான்கு கால்கள் நாளும் கொண்டு
மேன்மை தருமோர் மாட்சியும் கொண்டேன்!
களைத்த உடலினைக் கருத்தாய்ப் பேணி
இளைத்த மூச்சினை இனிதாய் மாற்றி
சுற்றம் தருகிற சுகமும் தந்து
இற்றை நாளை இன்பமும் ஆக்குவேன்!
தளிர்போல் மேனி தழுவத் தூண்ட
குளிர்முக மதிலே குறுநகை மின்ன
காதல் என்னும் காவியம் பிறக்க
நாதம் போலே நானும் இசைந்து
உறவை வளர்ப்பேன் உண்மை களிப்பேன்!
பரிவும் எந்தன் பாசமும் அறியார்
புரிதலும் இல்லாப் புன்மை மாந்தர்!
இகத்தில் புன்னகை ஈனம் மறைக்க
புகழெனும் ஏணி பொய்யின் பகட்டாய்
பதவி சேர்க்கும், பணமும் பெருக்கும்
சதமிலா வாழ்வைச் சாதக மாக்கி
ஆணவம் கொண்டே ஆண்டிடச் செய்யும்
வீணர் கொள்ளும் வேட்கை என்றும்
நான்கு கால்களில் நன்றே அமர்ந்து
மூன்று உலகும் முற்றாய் அடைய!
இழிநிலைக் குறிக்கும் இப்பெயர் தவிர்த்து
விழிப்பாய் நானும் வேற்றுரு தரித்தேன்!
அன்பை, அன்னை அருளைக் கூட்டி
ஒன்றாய் அளிக்கும் உருவாய் மாறி,
கட்டில் ஆனேன், காலம் முழுதும்
கட்டி வைப்பேன் கனவிலும் உறவையே!

மீண்டும் ஒரு ஆசை
(4காய்-மா-தேமா)

மீண்டுமொருப் பிறப்பெடுக்க மறுபடியும் ஓராசை மனதில் தோன்ற,
மாண்டுவிட்ட உணர்வலைகள் மண்ணகத்தே ஆடிநின்று மாயைக் காட்ட,
தீண்டுகின்ற உள்ளத்தின் திசைகளிலே வண்ணமதைத் தீட்டி வைக்கச்,
சீண்டிவிடும் மெய்யின்பம் சீதளத்துச் சித்திரமாய்ச் சித்தம் சேரும்!

வாழ்க்கையெனும் நாடகமோ, வரிசையாக எத்தனைநாள் வாழ்ந்தபோதும்,
தாழ்வினிலும் பெறுகின்றத் தவிப்பினிலும் எஞ்சுகின்றத் தாபம் போதும்!
ஏழ்பிறவி என்கின்ற எழிலானக் கானல்தன் எச்சம் போலும்
ஊழ்வினையின் பயனாக உறுத்துகின்ற பிறவிவேண்டா உண்மை புகலும்!

மாறிவிட்ட நெஞ்சமதில் மாற்றுதேடி ஓரேக்கம் முளையும் விட்டே,
தேறிவிடும் இறைவனவன் தெவிட்டாத உறவொன்றில் தெளியும் மனமே!
சீறிவரும் புயலொத்த சீர்குலைக்கும் துன்பத்தைச் சீராய்த் தள்ளி,
ஊறிவிடும் உன்னதனின் உவகையிலே உன்மத்தம் உள்ள மட்டும்!


நான் முதலமைச்சரானால்

மெய்தவத்தால் இங்கேநான் முதலமைச்சர் ஆகிவிட்டால் என்ன செய்வேன்?
உய்யவொரு வாய்ப்பென்றே உவந்தேற்று, உப்பரிகை வாழ்வு கொள்வேன்!
செய்வினையாய்ச் சேர்த்துவைத்து, சேயிழைகள் சேவையினைச் சார்ந்து நிற்பேன்
கொய்கின்ற வாய்ச்சாலக் கொள்ளையிட்டு மக்களின்பம் காவு கொள்வேன்!

மனசாட்சி இல்லாத மன்றங்கள் உருவாக்கிச் சட்டம் கொல்வேன்
இனமழிய அன்னியர்க்கு இன்தமிழின் மாண்பினையே கப்பம் தந்து,
வனமொழித்து நாடெங்கும் வலம்வரவே வற்றாதச் சுற்றம் சேர்ப்பேன்
தனம்சேர்த்தும் மாளாத தாகத்தால் தன்நிறைவில் குற்றம் காண்பேன்!

தீண்டாதோர் குலமென்று திக்கெட்டும் தனித்தனியே தள்ளி வைப்பேன்
மாண்டோரை உயிர்ப்பித்து வாக்கெடுப்பு வாகையிலே தன்னை மறப்பேன்
வீண்பகையை நெருப்பினிலே வளர்க்கின்ற வகையினிலே மூட்டி வைப்பேன்
சாண்முழத்தில் நீதிதனைச் சாக்காட்டுக் கனுப்பிவிட்டு வேதம் சொல்வேன்

என்பெருமை பேசுமொரு இளங்காளை வேலையில்லாக் கூட்டம் சேர்ப்பேன்
இன்சிறப்பைப் பெற்றிடவே இல்லார்க்கு இல்லாமை என்றும் ஈந்தே,
நன்மக்கள் வாய்மூட நல்லுணர்வு தானழிய நாளும் செய்வேன்!
இன்றிருக்கும் இன்பநிலை என்கனவு, இதைவிடுத்து என்ன செய்வேன்?


மலரும் வண்டும்

இரைக்கென உயிர்கள் இரவும் பகலும்
உரைக்க இயலா ஒன்றிய உணர்வும்
தேடும் விழியும் தேர்ந்த முறையும்
நாடும் வழியும் நால்வகைக் கொண்டு
அல்லல் உறுவது அகில இயற்கை!
எல்லா இனமும் இயல்பென அறியும்
சின்ன மலரின் சிறுதேன் துளிகள்
வண்ண வண்டினை வலிந்து ஈர்க்கும்!
வாடும் மலராய் வனிதை அவளைக்
கூடும் வண்டாய்க் கோமகன் தன்னை
உருவகம் கொள்ள உவமை தந்தத்
தருணம் எதுவோ தர்மம் தானோ?
காதல் சுவையைக் காமப் பசியாய்
சாதல் மீறியச் சாதனை ஒன்றை
மாற்றிய தேனோ மாறும் உலகில்
ஆற்றும் செயலும் ஆணா திக்கமோ?!

நம்பிக்கை

தாய்விரலால் சாற்றுகின்ற தனியொருவன் பதமே
தான்பெற்ற பிறவிதனைத் தழைக்குமொரு ஊற்று,
சேய்கொள்ளும் நம்பிக்கை சேர்க்குமந்த உறவு
சோர்வகற்றி உள்ளமதில் செழித்திடுமே அன்பு.
காய்முற்றிக் கனிவதுபோல் கண்ணெதிரே வளரும்
கண்ணுறங்கும் வேளையிலும் கருத்தினிலே சுமக்கும்
வாய்நிறைந்த வாழ்த்தினிலே வாழ்ந்திடுமே பண்பு
வானுலகப் பேரின்பம் வந்திடுமே இங்கு!

வெண்ணிலவாம் பெண்ணவளே! விழி வெல்லும் உலகு!
விடிவெள்ளி வாழ்வுக்கு! வீசுமொரு தென்றல்!
கண்ணிரண்டில் சேர்த்துவைத்தக் கணைதாங்கி மெல்ல,
காளையவன் சோர்ந்துமனம் காலடியில் விழுவான்!
மண்தொடுமுன் அவள்தாங்கி மணம்சேர்ப்பாள் மனதில்
மாலையிட ஆவலுந்தும் மன்னவனின் அருகில்
பண்ணெழுப்பும் நம்பிக்கை பாவையவள் நெஞ்சில்
பாட்டிசையாய் கலந்திடுவாள் பாரினிலே உறவில்!

தனித்தியங்கும் மனமிருந்தும் தனிமையிலே வாழ்வு
தான்சுவைக்க வேண்டுமொரு சுற்றமுடன் நட்பு.
இனிமையுந்தான் வந்துசேரும் இங்கிதமாய் இங்கே
இம்மண்ணில் யார்பகைவர்? எல்லோரும் உற்றார்!
கனிமொழியும் காற்றாகக் கடுகிவரும் பந்தம்
கார்மேகத் துன்பமது கட்புலனில் பிந்தும்
இனியேனும் நம்பிக்கை இன்முகத்தில் கூட்டி
ஏற்றமிகு உறவினிலே இழைந்திடுவோம் நாளும்!

மாற்றமொன்றே நிகழுலகில் மாறாத ஒன்று
மாய்ப்பதுவும் பாழ்மனதை மாயையாக நின்று.
கூற்றுவனின் நாடகத்தால் கூடிவிடும் மன்றம்
கொட்டிவிட்டத் தௌ;ளமுதாய்க் கொள்ளைபோகும் இன்பம்!
பாற்கடலின் பரந்தாமன் பாதமதைப் பற்றப்
பறந்தோடும் படுந்துன்பம் பல்வினையும் முற்றும்
காற்றினிலே உயிர்கலக்கும் காலமுன்னே கொள்ளும்
கலையாத நம்பிக்கைக் கரையதிலே சேர்க்கும்!


ஊர்வலம்
(ஊர்வலம் மூன்று முறைகளில் முடிகிறது)


உருவில்லா இறையம்சம் உருதாங்கஇ மண்ணில்
உதிக்கின்ற தந்தையின் ஊனுடம்பில்இ கண்ணில்
மருவில்லா மாதரசி மனையாளின் காதல்
மணிவயிறு தானேகிஇ முத்தெனெவே கனிந்துஇ
கருவாகிஇ அவளன்பு கலந்திடவே செழித்துஇ
கண்ணாக வளர்ந்திங்கே காட்சியாய்இ அன்பின்
திருவாகிஇ வடிவாகிஇ தள்ளாடும் அழகில்
தேனாகி ஊர்வலமாய் திசைதோறும் அசையும்!


அசைகின்ற ஊர்வலத்தின் அழகினையே பனியாய்
ஆடிவரும் வேளையிலே அண்டிவிழும் திரையாய்
திசைமாற்றக் குவிந்துவிடும் திண்ணமது பொறியாய்
திகட்டிவிடும் கடமையும்இ தேர்ந்துவிடும் பொறுப்பும்!
தசைகாணும் அனுபவத்தின் தவறாதப் பரிசாய்
சேர்ந்துவிடும் பாரத்தில் சூழ்ந்துவிடும் தொய்வும்
மிசையேறும் கணமதிலே மீண்டுவந்த வழியில்
மீட்டுவந்த இன்பமென மிச்சமொன்றும் இல்லை!


ஊர்வலத்தின் சிறப்புக்கே ஊறுபோன்று மாசாய்
உவக்கவொண்ணா இடையூறாய் ஒருகோடி துன்பம்!
சீர்பெறா குணநலனும்இ சீரழிக்கும் ஆசையும்இ
சிறகடிக்க இயலாதத் தடையாகச் சுமையும்இ
பேர்தனையே நாடிபெறும் பெரும்சோர்வும் தளர்வும்
பிறரறியாப் போதினிலே பேரழிவைத் தருமே
ஊர்மெச்ச வாழ்கின்ற உன்னதமும் தனக்குள்
உண்டாக்கித் தந்திடுமே உண்மையிலே வெறுமை!


முடிந்துவிடும் ஊர்வலமும் முற்றாக ஒருநாள்
முனைந்தாலும் தொடர்ந்திடவே முடியாது போகும்!
இடிந்துவிடும் சுற்றத்தின் இணைந்துவிட்ட உறவும்இ
ஈட்டிவந்த செல்வத்தின் இங்கிதமும்இ சுகமும்!
விடிந்துவிடும் காலத்தை விழித்துணராச் சடமாய்
வீண்கனவாய் வாழ்வதுவும் வீழ்ச்சியிலே முடியும்!
கடிதன்றோ இதுவரையில் கண்டதுவும்இ உள்ளம்
கொண்டதுவும் நின்றிங்கே கனவெனவே சொல்ல!



அல்லது



இன்பமதை நாடியோடி இளைத்தநெஞ்சும் பஞ்சாய்
இனித்தொடர இயலாது ஏக்கத்தில் ஒடுங்கும்!
முன்செய்தத் தீவினையோ முந்திநிற்கும் கொஞ்சம்
மூண்டுவரும் இப்பிறவி மூப்பினிலே முடங்கும்!
பின்வருமோர் பொழுதினிலே பிரித்தறியாக் காரணத்தால்
பொன்போன்ற இவ்வாழ்வும் பொசிந்தொழுகி அடங்கும்!
முன்போல மீண்டுமது உருமாறி இறையில்
ஒன்றாகி முடியுமெனில் ஊர்வலமும் எதற்கோ!?




அல்லது



ஆண்டாண்டு கண்டசுகம் அருகினாலும்இ ஞானம்
ஆண்டுகொள்ளும் வெற்றிடத்தை! அரியவனை ஆன்மா
மீண்டுமொரு புதுப்பிறப்பாய் மெல்லெனவே கண்டுஇ
மிகுந்துவரும் உணர்வினிலே மீளவொண்ணா திணைந்து
தாண்டிவிடும் பரவுலகு! தனக்குள்ளே முனைந்து
தான்கொண்டப் புதுமையிலே தானென்ப தழிந்துஇ
காண்பதெல்லாம் அவன்செயலாய் கனிந்துவிடும் அன்பில்
கரைசேரும் ஊர்வலமும் கடந்தவனின் உறவில்!